பெங்களூரு : ”வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டாமல், கன்னடர்களின் தலைமையில் காங்கிரஸ் அரசு கல்லை போடுகிறது. ஹிந்து, முஸ்லிம்கள் இடையே தீ மூட்ட முதல்வர் சித்தராமையா முயற்சிக்கிறார்,” என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டாமல், கன்னடர்களின் தலையில் காங்கிரஸ் அரசு கல்லை போடுகிறது. ஆனால், முதல்வர் சித்தராமையாவோ, ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே தீ மூட்டும் பணியில் ஈடுபடுகிறார்.
ஜாதி, மதங்களுக்கு இடையில் தீ மூட்டுவதில் சித்தராமையா ‘ஹீரோ’வாக திகழ்கிறார். வறட்சி நிவாரணமாக, 2,000 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என அரசு அறிவித்தும், இதுவரை விடுவிக்கவில்லை.
15,000 – 20,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய கூட அரசிடம் பணம் இல்லை. எனவே தான் மாணவர்கள், கழிவறையை சுத்தம் செய்து வருகின்றனர். மூன்று மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால், காங்கிரஸ் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. தற்போது ராகுலுக்கு பதிலாக, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
விரக்தி அடைந்த காங்கிரசார், மற்ற விஷயங்களை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வேட்பாளர்களை பா.ஜ., மேலிடம் தேர்ந்தெடுக்கும். ம.ஜ.த., எங்களுடன் உள்ளது. இதனால் பா.ஜ., பலவீனமாக உள்ள மாண்டியா, ஹாசன், பெங்களூரு கிராமப்புறங்களில் பலம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement