நகைச்சுவை நடிகராக நமக்குப் பரிச்சயமானவர் முத்துக்காளை. குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு பலருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்கிற எண்ணத்தில் `நான் எப்படி குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டேன்!’ எனக் குடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
ஏற்கெனவே இரண்டு டிகிரியை தொலைதூரக்கல்வியில் முடித்திருக்கும் முத்துக்காளை தற்போது பி.லிட்., பட்டம் பெற்றிருக்கிறார். அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.
“சின்ன வயசுல என்னால படிக்க முடியாம போயிடுச்சு. இப்ப அப்படி சொல்லக் கூடாது. வசதி வாய்ப்பு இல்லைன்னாலும் படிச்சிருக்கணும். அந்த வயசுல விளையாட்டுத்தனத்தால படிக்காம விட்டுட்டேன். சிலம்பம், கராத்தே கத்துக்கணுங்கிற எண்ணம் தான் அப்ப அதிகமா இருந்ததே தவிர படிக்கணும்னு தோணல. இன்னொன்னு வீட்டுச் சூழல் காரணமா படிக்க முடியல. பிறகு படிப்பை நிறுத்திட்டு மளிகைக்கடைக்கு வேலைக்குப் போனேன். அப்படியே வாழ்க்கை நகர்ந்துருச்சு.
சினிமாவுல ஸ்டண்ட் மேன் ஆகணும்னு விரும்பினேன். அதுக்காகத்தான் கராத்தேவில் பிளாக் பெல்ட், சிலம்பம், ஜிம்னாஸ்டிக்னு எல்லாமே கத்துக்கிட்டேன். அப்ப வேலைக்குப் போயிட்டு இருந்ததனால என்கிட்ட இருந்த காசுல பீஸ் கட்டி பள்ளிப் படிப்பை முடிச்சேன். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடி அலைஞ்சேன். சினிமாவுல என் முகத்தைக் காட்டுறதுக்கு எனக்கு பத்து வருஷம் ஆச்சு. என் கூடப் படிச்சவங்க எல்லாரும் நல்ல வேலையில் இருக்காங்க. நாம எதுவும் செய்யாமல் விட்டுட்டோம். பெருசா வசதி, வாய்ப்பும் இல்ல. படிப்பும் இல்ல. படிக்கணுங்கிற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகமாச்சு.
எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான `பொன்மனம்’ படத்துல என்னை காமெடி பைட்டர் ஆக அறிமுகப்படுத்தினாங்க. அப்படியே தொடர்ந்து படங்கள் வர ஆரம்பிச்சது. கையிலும் காசு வர ஆரம்பிச்சது. நாலு பேரை சந்திக்கும்போதோ பழகும் போதோ எனக்கு நடிகன் என்பதையும் தாண்டி ஒரு அறிமுகம் தேவைப்பட்டது. கல்விதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு புரிஞ்சது. பத்து வருஷத்துக்கு முன்னாடியே படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, அப்ப இருந்த சூழல் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க முடிஞ்சது. அதனால அப்போ படிக்கல. இப்ப படிக்கணும்னு முடிவெடுத்த பிறகு ஷூட்டிங் அது இதுன்னு என்ன காரணமா இருந்தாலும், எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அந்தப் படிப்பை முழுமையா படிச்சு முடிக்கணுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துல நுழைவுத் தேர்வு வச்சாங்க. அந்தத் தேர்வு எழுதி பாஸ் ஆகி படிப்பைத் தொடங்கலாம்னு முடிவெடுத்தேன். சும்மா படிச்சா படிக்கலாம் என்கிற எண்ணத்துல போகல. போகும்போதே எவ்ளோ வறுமை வந்தாலும் கட்டாயம் படிச்சிடணுங்கிற ஆணித்தரமான எண்ணத்தோட தான் படிக்கப்போனேன். முதலில் ஹிஸ்ட்ரி எடுத்தேன். அது கதை மாதிரி சண்டை, போர் பற்றி இருந்தது எனக்கு ஆர்வமா இருந்துச்சு. எந்த அரியரும் வைக்காம செகண்ட் கிளாஸ்ல பாஸ் ஆனேன்.
தேர்வுக்கு பத்து நாளைக்கு முன்னாடியே எந்த ஷூட்டிங், எவ்ளோ பணம் வருதுன்னாலும் அந்த டிகிரியை முடிக்காம விடக் கூடாதுன்னு வரலைன்னு சொல்லிடுவேன். வகுப்பு எடுக்கிற தேதியிலும் தவறாமப் போயிடுவேன். அவங்க கொடுக்கிற மொத்த அசைன்மென்ட்டையும் முடிச்சிடுவேன். படிக்கணுங்கிறதை ஒரு கனவா, லட்சியமா, ஆசையா என்ன பேர் வேணும்னாலும் வச்சிக்கலாம் அப்படி எடுத்துதான் படிச்சேன். அந்த நேரத்தில் தான் நான் ஆல்கஹாலில் இருந்து வெளியே வந்தேன். `முத்துக்காளை குடிக்கிறதனால ஒழுங்கா ஷூட்டிங் வர மாட்டேன்றாரு’னுலாம் பேச ஆரம்பிச்சாங்க. சில மீடியாவில் நான் செத்துட்டேன்னு செய்தி போட்டாங்க. அந்த சமயம் தான் நான் டிகிரி பாஸ் ஆனேன். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் என்னைக் கூப்பிட்டு, `இந்த வயசுலயும் படிக்கணும்னு முடிவெடுத்து படிச்சிருக்காங்க. எல்லாரும் இவரை மாதிரி இருக்கணும்னு’ பெருமைப்படுத்தினாங்க. அது எனக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்துச்சு.
பிறகு தமிழ் படிக்கணும்னு முடிவெடுத்து எம்.ஏ., தமிழ் சேர்ந்தேன். அதுல முதல் வகுப்பில் தேர்ச்சியானேன். சரி இன்னொரு டிகிரி படிக்கலாம்னு பி.லிட்., போட்டேன். இப்ப அதோட ரிசல்ட் வந்திருக்கு. அதுலேயும் முதல் வகுப்புல தேர்ச்சி பெற்றிருக்கேன். வாழ்க்கையில் ஊரை விட்டு வந்ததனால இப்ப ஒரு முழு மனிதனாக மாறின உணர்வு எனக்கு இருக்கு. படிக்கவும் செய்துட்டேன், நடிக்கவும் செய்துட்டேன். இன்னைக்கு நான் எங்கப் போனாலும்,`முத்துக்காளை குடிச்சு குடிச்சு வாழ்க்கையை இழந்திடுவான்… சீக்கிரம் செத்துடுவான்னு நினைச்சோம். இன்னைக்கு அதுல இருந்து மீண்டு வந்து வேற எதையோ நோக்கி ஓடிட்டு இருக்கான்’னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு.
நிறைய ஸ்கூல், கல்லூரிகள்ல பேசக் கூப்பிடுறாங்க. ஆல்கஹாலில் இருந்து மீண்டு வர முடியாம தவிக்கிறவங்ககிட்ட நான் எப்படி அதுல இருந்து மீண்டு வந்தேன்னு சொல்றேன். நான் குடிக்கும்போது என் குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. இப்ப நான் குடிப்பழக்கத்தை விட்டு 7 வருஷத்துக்கும் மேலாகிடுச்சு. நான் இழந்த அத்தனையையும் மீட்டெடுக்கிறதுக்கான வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டேன்.
வடிவேலு சார் கூட பத்து பேர் நடிச்சான். பத்து பேரும் ஒரே மாதிரிதான்னு இல்லாம முத்துக்காளை வேற ஒண்ணு செய்றான்னு நான் மத்தவங்களை விட்டு மாறுபட்டு நிற்கணுங்கிறது எண்ணத்துல படிக்க ஆரம்பிச்சேன். இப்ப மூணு டிகிரி முடிச்சிட்டேன். இனியும் தொடர்ந்து படிப்பேன். சாகுற வரைக்கும் நடிக்க்கிறேனோ இல்லையோ ஆனா நிச்சயம் படிப்பேன். ஆல்கஹாலில் இருந்து நான் மீண்டு வந்ததைப் பார்த்து பத்து பேர்கிட்ட மீண்டு வந்திருக்காங்க.
நான் படிக்கிறதைப் பார்த்து சிலர் நானும் படிக்கப் போகலாம்னு இருக்கேன்னு சொல்றாங்க. நம்ம ஒரு வழிகாட்டியாக மத்தவங்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்க முயற்சிக்கலாமேங்கிற ஒரு ஆசை… அவ்ளோதான்!” என்றார். அவருக்கு பூங்கொத்து வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.