பாட்னா,
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்தனர்.
இதனால் பிரதமர் வேட்பாளர் பட்டியலில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பெயர் நிராகரிக்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. மேலும் நிதிஷ்குமாரின் பிரதமர் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அவரது எதிர்ப்பாளர்களும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் கருத்து தெரிவித்தனர். இந்த பிரச்சினையில் எந்த கருத்தும் கூறாமல் இருந்து வந்த நிதிஷ்குமார், நேற்று தனது கருத்தை தெரிவித்தார்.
பாட்னாவில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மரியாதை செலுத்த வந்தபோது நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது எந்த மதப் பிரிவைச் சார்ந்தவர்களும் சங்கடமாக உணரவில்லை. பா.ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கத்தான் விரும்பினேன். வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. ‘எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை…. மனக்கசப்பும் இல்லை’.
அதே நேரம், இந்தியா கூட்டணி கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். தொகுதி பங்கீடு எல்லா மாநிலங்களிலும் நல்லபடியாக நடக்கும் என்று நான் நம்புகிறேன் என்று நிதிஷ்குமார் கூறினார்.
மேலும் அவரிடம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘எங்கள் கட்சியில் அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறோம்’ என்று கூறி, அந்த ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.