கொச்சி: ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சபரிமலை செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெரிசலை குறைக்க வைக்கம் பகுதியிலேயே பக்தர்களின் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதை கண்டித்து பக்தர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. ஆங்காங்கே ஐயப்ப பக்தர்கள் குடிநீர், உணவு இன்றி தவிப்பதாக மின்னணு ஊடகங்கள், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.