சென்னை: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையினால் சேதமடைந்த திருக்கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (டிச.26) ஆணையர் அலுவலகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட திருக்கோயில்களில் சேதமடைந்த கட்டுமானப் பணிகளை சீரமைப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 26 திருக்கோயில்களில் சேதமடைந்துள்ள முன் அலங்கார மண்டபம், ஏகாதசி மண்டபம், படித்துறை மண்டபம், திருமதில்சுவர், வெளித்தெப்பம் சுற்றுச்சுவர் போன்ற கட்டுமானங்களை செப்பனிட்டு சீரமைக்கும் பணிகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கட்டுமானங்களை சீரமைக்க சுமார் ரூ.5 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்படி, பணிகளை செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து தொடங்கி முடித்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தலைமைப் பொறியாளர் பி.பெரியசாமி, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.