நரிக்குடி அருகே, டாஸ்மாக் ஊழியரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள சுள்ளங்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 42), இசலி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மதுபான விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வசூல் தொகை ரூ.1 லட்சத்து 3,000 ரூபாயை நேற்று காலையில், வங்கியில் செலுத்துவதற்காக சங்கிலி எடுத்து சென்றுள்ளார். தொடர்ந்து சங்கிலி, இருவர்குளம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து அந்த வழியாக மற்றொரு டூவீலரில் மர்ம நபர்கள் இரண்டு பேர் வந்துள்ளனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், டாஸ்மாக் ஊழியர் சங்கிலியின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவிய மர்ம நபர்கள், அவரிடமிருந்து மது விற்பனை பணம் ரூ.1லட்சத்து 3 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதனால் நிலைகுலைந்த சங்கிலி, டூவீலரை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்த விஷயத்தை டாஸ்மாக் உயரதிகாரிகளுக்கும், நரிக்குடி போலீஸூக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், மாவட்டத்தின் வாகன சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்திய போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.
அதனடிப்படையில் கிடைத்த தகவலை கொண்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், சிவகங்கை மாவட்டம் வீரனேந்தல் காட்டுப்பகுதியில் டூவீலருடன் நின்றுக்கொண்டிருந்த சிவசக்தி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், சிவசக்தியும், அவரின் நண்பரும் சேர்ந்தே சங்கிலியிடம் டாஸ்மாக் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து சிவசக்தியை போலீஸார் கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்” என்றனர்.