புதுச்சேரி: மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயண நிகழ்ச்சி வில்லியனூர் விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்றது.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்தந்த பகுதிகளை சேர்ந்த பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா வாகனத்தையும் பார்வையிட்ட அவர், 2024-ம் ஆண்டுக்கான நாட்காட்டியை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சிவசங்கரன் எம்எல்ஏ, மத்திய கலாச்சாரத்துறை இணை செயலர் உமா நந்தூரி, உள்ளாட்சித்துறை செயலர் முத்தம்மா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமரின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதி மக்களுக்கும் பிரதமரின் திட்டம் சென்று சேர்ந்துள்ளது. நான் தமிழகம் முழுவதும் செல்லவில்லை. தூத்துக்குடிக்கு சென்றேன். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சொன்ன கருத்தை தான் நான் வெளிபடுத்தினேன். அது என்னுடைய கருத்து கிடையாது. 3 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று இருந்தேன். ஆனால் 15 கிராமங்களுக்கு போக வேண்டி வந்தது. தூத்துக்குடியில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். புதுச்சேரியில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் சரியாக நடப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என முதல்வர் முன்னிலையில் கூறினேன்.தூத்துக்குடி என்னுடைய சொந்த ஊர். நான் போட்டியிட்ட இடத்தில் எனக்கு கொஞ்சம் மக்கள் ஆதரவு கொடுத்தனர். முழுமையாக ஆதரவு கொடுக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில்தான் அங்கு சென்றேன்.
தமிழக அமைச்சர் சேகர்பாபு சொல்வது போல் போட்டியிட செல்லவில்லை. நிர்வாகத்திலும் தலையிட செல்லவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சொல்வதுபோல், நான் அங்கு ஆய்வு செய்யவும் போகவில்லை. என்னுடைய சகோதார, சகோதாரிகளின் துன்பத்தில் பங்கெடுத்து கொள்ளவும், ஆறுதல் கூறவும்தான் சென்றேன். ஆய்வு செய்ய செல்லவில்லை என்பதை அப்பாவு புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை குற்றம் சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால், தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறுகிறேன்.
நான் மக்களுடைய செய்தி தொடர்பாளர். நான் போட்டியிட வேண்டும் என்று செல்லவில்லை. நான் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்று எதுவும் கேட்கவில்லை. வருங்காலத்தில் என்னுடைய திறமைக்கேற்றார்போல் பணியை கொடுக்க வேண்டியது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கடமை.
அதற்கான செயலை அவர்கள் செய்வார்கள். இன்று வரை எனக்கு கொடுத்த பணியை செய்து கொண்டு வருகிறேன். என்னுடைய சகோதார, சகோதாரிகள் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக நான் சென்று ஆறுதல் கூறியதை திமுக கொச்சைப்படுத்த வேண்டாம். தமிழக அரசை மத்திய அரசின் குழு பாராட்டி இருப்பது சும்மா உள்ள பாராட்டு. இவ்வாறு அவர் கூறினார்.