நாடு முழுவதும் புதிய வகை கரோனா பரவல்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் நேற்று 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் முதல் கரோனா அலை உச்சத்தில் இருந்தது. 2021 ஏப்ரலில் 2-வது அலை உச்சத்தை தொட்டது. 2022 ஜனவரியில் 3-வது கரோனா அலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதியவகை வைரஸ் பரவலை தடுக்க மாநிலஅரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 628 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கேரளாவில் கரோனாவால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,33,334 ஆக உயர்ந்தது.

நாட்டில் இதுவரை கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 4.50 கோடியாகவும், அதில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4.44 கோடியாகவும் உள்ளது. தேசிய மீட்சி விகிதம் 98.81 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் உள்ளது. இதற்கிடையே, அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், கடந்த ஓராண்டாக தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்ததாக கூறப்படும் ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்தபுதிய கரோனா வைரஸ் தொற்றுகேரளாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த வகை தொற்றுபரவியுள்ளதா என்பதை கண்டறிய தொற்று மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

63 பேருக்கு ஜேஎன்1: இந்த நிலையில், கோவா 34, மகாராஷ்டிரா 9, கர்நாடகா 8, கேரளா 6, தமிழகம் 4, தெலங்கானா 2 என நாடு முழுவதும் மொத்தம் 63 பேருக்கு ஜேஎன்1 வகைகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ஜேஎன்1தொற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும்இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வின் முடிவுகள் வெளியாக இன்னும்சில நாட்களாகும். அதனால், தமிழகத்தில் ஜேஎன்1 பாதிப்பு உள்ளது என்பதை இப்போதே கூற முடியாது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.