நைஜீரியாவில் ஆயுதக் குழு கொலைவெறித் தாக்குதல்: 113 பேர் பலி; 300 பேர் காயம்

லாகோஸ்: நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பலர் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது ப்ளேட்டூ எனும் மாகாணம். இந்தப் பகுதி இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் – விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என பல இன்னல்களுக்குப் பெயர் போன பிரதேசமாக இருக்கிறது. இப்பகுதியால் எப்போதுமே நைஜீரிய அரசுக்கு தலைவலிதான் என்பது போல் சர்ச்சைகள் இல்லாத நாள் இல்லை எனும் அளவுக்கு அங்கே கலவரங்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோலத்தான் கடந்த ஞாயிறு ப்ளேட்டூ பகுதியில் ஒரு தாக்குதல் நடைபெற்றது. முதற்கட்டமாக இந்தத் தாக்குதலில் 16 பேர் பலியானதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய (டிச.26) நிலவரப்படி 113 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கே நைஜீரிய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் அரசாங்கம் தரப்பில், “கடந்த மே மாதத்துக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடந்துள்ளது. 20 வெவ்வேறு சமூகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதுவரை 113 உடல்களைக் கைப்பற்றியுள்ளோம். 300 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பது பற்றி எந்த விவரமும் தெரிவிக்கவிக்கப்படவில்லை. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

400 பழங்குடிகள், 521 மொழிகள்! 400 வகையான பழங்குடிகள் வாழும் பகுதிகளை இணைத்து 1914-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நைஜீரியா உருவாக்கப்பட்டது. தனி நாடாக உருவாக்கப்பட்ட பிறகு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நைஜீரியா 1960-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆப்பிரிக்க நாடாக நைஜீரியா உள்ளது. 2013-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்நாட்டில் 17 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் நைஜீரியாவில் வாழ்கின்றனர். நைஜீரியா நாட்டில் 521 மொழிகள் பேசப்படுகின்றன. ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ளது. எண்ணெய் உற்பத்தியில் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது நைஜீரியா முதல் இடத்தில் உள்ளது. இப்படியாக பல்வேறு இன, மொழி குழுக்கள் இருப்பதாலேயே அங்கு மோதல்கள் அதிகம் நடக்கின்றன என்பது சர்வதேச விவகாரங்கள் துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

போகோ ஹராம் அச்சுறுத்தல்: இதுதவிர நைஜீரியாவில் இஸ்லாமிய (ஷாரியத்) சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மைகாலமாக போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 2014-ல் நைஜீரியாவின் தொலைதூர கிராமமான சிபோக்கில் உள்ள பள்ளியிலிருந்து 276 மாணவிகளைக் கடத்திச்சென்றதன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட பயங்கரவாத அமைப்பு இது. இன்றளவும் அவ்வப்போது பள்ளிக் குழந்தைகளைக் கடத்துவதும் பின் அவர்களை பெரும் தொகை பெற்றுக் கொண்டு விடுவிப்பதுமாக இந்தக் குழு இயங்கிவருகிறது.

2002-ல் நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான மைதுகுரியில் முகம்மது யூசுஃப் எனும் மதகுருவால் போகோ ஹராம் இயக்கம் தொடங்கப்பட்டது. ‘பெண்கள் கல்வி பயிலக் கூடாது; ஆண்கள் மதக் கல்வியைத்தான் பெற வேண்டும்; இஸ்லாமியச் சட்டப்படிதான் ஆட்சி நடக்க வேண்டும், அனைவரும் இஸ்லாமிய மதத்தைத் தழுவ வேண்டும்’ எனும் குறிக்கோள்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு அல்-கொய்தா அமைப்பு துணை நின்றது. அண்டை நாடுகளிலும் பரவியிருக்கும் இந்தக் குழுவின் வன்முறைகளால் இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் அகதிகளாகியிருக்கின்றனர். இந்த அமைப்பு உருவானதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் உண்டு.

இன, மத மோதல்கள், கொள்ளைக்காரர்கள் தீவிரவாதிகள் தாக்குதல்களால் எண்ணெய் வளம் இருந்தும் கூட வளார்ச்சியில் பின்தங்கிய பகுதியாக நைஜீரியா இருக்கின்றது என்பது வேதனை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.