பாகிஸ்தானில் பிப்ரவரி 8, 2024 அன்று 16வது தேசிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானப் பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் (ECP) சமீபத்திய திருத்தங்களின் படி, பொது இடங்களில் 5 சதவிகிதம் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் முதன்முறையாக, இந்து பெண் ஒருவர் பொதுத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினர் சவேரா பிரகாஷ் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இவரின் தந்தை கடந்த 35 வருடங்களாகப் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தார். அவரைத் தொடர்ந்து சவேரா பிரகாஷ் அந்தக் கட்சியில் இணைந்தார். அதே கட்சியில் மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.
அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் 2022 பட்டம் பெற்று மருத்துவரான சவேரா பிரகாஷ் தொடர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இது குறித்து உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர் சலீம் கான்,”புனரிலிருந்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் பெண் சவேரா பிரகாஷ்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தன் அரசியல் பயணம் குறித்துப் பேசிய சவேரா பிரகாஷ், “எனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன். சமூகத்தின் நலனுக்கான எனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவேன்.

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யவும், அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதுமே எனது இலக்கு. வளர்ச்சியில் பெண்கள் வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்படுவதையும் ஒடுக்குவதையும் முற்றிலுமாக மாற்ற வேண்டும். எனது தந்தை ஓம் பிரகாஷ் போலவே, பின்தங்கிய மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நான் மருத்துவப் பின்னணி கொண்டவள் என்பதால், மனிதக்குலத்திற்குச் சேவை செய்வதில் அர்ப்பணிப்பு என் இரத்தத்தில் உள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.