வட மற்றும் தென்மாவட்ட பெருமழை தமிழக மக்களை துயரில் ஆழ்த்திவிட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிட்டதட்ட 10 நாள்களாக நடந்துவரும் சூழலில் மத்திய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி பெறுவதில் மும்முரம் காட்டுகிறது தமிழ்நாடு அரசு. குறிப்பாக, மீட்பு பணிகள் மற்றும் நிதி பெற குரல்கொடுப்பது என தமிழ்நாடு அரசியலின் பேசுபொருளாக மாறியிருக்கிறார் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரின் செயல்பாடுகளும் தடாலடி பேச்சுகளும் அவருக்கான பொலிட்டிக்கல் மைலேஜை அதிகரிக்கின்றனவா?
தி.மு.க அமைச்சர்களில் மீட்புப் பணிகளில் முதன்மையாக நிற்கிறார் உதயநிதி என்ற கருத்து உருவாகியிருக்கிறது. அதேபோல் பேரிடரை கையாள மத்திய அரசு நிதி தருவது மிக அவசியம் என மென்மையாக தமிழ்நாடு முதலமைச்சர் கோர, கவனமீர்க்கும் விதமாக அடித்து ஆடுகிறார் அமைச்சர் உதயநிதி. `நாங்கள் ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காச கேட்கல’ என அவர் காட்டிய அதிரடி மத்திய அரசை டென்ஷனாக்கியுள்ளது
உதயநிதியை கண்டித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது, பா.ஜ.க அவரை டார்கெட் செய்து விமர்சிப்பது என வெள்ள அரசியலின் மையமாக மாறியிருக்கிறார் உதயநிதி. ஒருபக்கம் உதயநிதி களத்தில் நிற்கிறார் என்ற பாராட்டும், மறுபக்கம் ஸ்டாலினுக்கு அடுத்த உதயநிதிதான் என்பதை நிறுவுவதற்கான உதயநிதிக்கு அதீத முக்கியத்துவமும் அதீத விளம்பரமும் செய்யப்படுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளன.
நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், “முதலில் உதயநிதி தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகினார் என்பதே உண்மையில்லை. திட்டமிட்டு அவரை மையப்படுத்தி விளம்பரப்படுத்தி பேசுபொருளாக்கியுள்ளது தி.மு.க ஐடி விங். தமிழ்நாடு அமைச்சரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறகு மழைவெள்ளத்தை பார்த்த மூத்த அமைச்சர்கள் எத்தணையோ பேர் இருக்கும்போதும் எதோ உதயநிதி ஸ்டாலின் மட்டும்தான் வழிநடத்தும் ஆற்றல் பெற்றவர்போல் காட்டிக் கொண்டது தி.மு.க. சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு நேரடியாக களத்துக்கு சென்றுவந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். தமிழக மக்கள் தி.மு.க அரசுமீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்
முன்னெச்சரிக்கையில் தான் கோட்டைவிட்டார்கள். மீட்கவாவது வந்திருக்கலாமென மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். ஆகவேதான் களத்துக்கு வரும் தி.மு.க பிரதிநிதிகளை மக்களே விரட்டியடிக்கிறார்கள். இதற்கிடையில் ஊடக வெளிச்சத்துக்காக சினிமா வசனங்களை பேசிக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தும் உதயநிதி பேச்சுக்கு எப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்? சொல்லப் போனால் இந்த வெள்ள பாதிப்பை பயன்படுத்தி மு.க ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் என வாரிசு அரசியல் காய்நகர்த்தலை கச்சிதமாக செய்கிறது தி.மு.க. பேரிடரில் அரசியல் செய்வதை மக்கள் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள்” என்றார் காட்டமாக.
நம்மிடம் பேசிய சி.டி.ஆர் நிர்மல் குமார், “எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ, அப்போதெல்லாம் யார்மீதாவது பழிபோட்டு தப்பித்துக் கொள்வதே விடியாத தி.மு.க-வின் அரசியல் பாணி. வெள்ள பாதிப்புகளை சரியாக கையாளததால் மக்கள் தி.மு.க மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதால் தடாலடியாக எதையாவது பேசி மக்களை திசைதிருப்பலாம் என கணக்குபோடுகிறது தி.மு.க. `அப்பன் வீட்டு காசா?” என உதயநிதி பேசுவதன்மூலம் அவர் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை மீண்டுமொரு முறை நிரூபிக்கிறார்” என்றார்.
இதற்கு விளக்கமளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வில் தற்போதைய தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு தகுதியுள்ளவராக வளர்ந்துவிட்டதால்தான் எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ.க அரசும் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். சென்னை மழையிலும் சரி, தென்மாவட்ட மழை வெள்ளத்திலும் சரி, உதயநிதி மக்களோடு நிற்கிறார். ஆகவே நிலவரத்தை நன்கு புரிந்துகொண்டு நிதி ஆதாரங்களை விரைந்து வழங்க வேண்டுமென பேசுகிறார். மேலும் அவரின் பேச்சு சாமானிய மக்களின் எண்ணோட்டம்தான். `அப்பன் வீட்டு சொத்தா?` என அவரின் பேச்சு.. நாங்க என்ன ஏ.டி.எம்-ஆ என ஒன்றிய அமைச்சரின் ஒருவரின் ஆணவப் பேச்சுக்கான பதிலடிதான். அமைச்சர் உதயநிதியையும் அவரின் துணிவான பேச்சையும் மக்கள் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள், அவரது பேச்சை தடாலடி எனச் சொல்வதைவிட உரிமைக்குரல் எனலாம்” என்றார்
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் “மழைவெள்ளத்தால் தி.மு.க-வுக்கு அரசியல் ரீதியாக பேரடி என்பதை அவர்களே மறுக்க மாட்டார்கள். ஆபத்து காலத்தில் அரசு நம் பக்கம் நிற்கவில்லை என மக்களின் வேதனை சென்னையிலும் நெல்லையிலும் உண்டு. இப்பெரும் அதிருப்தியை தடாலடி பதில்களாலும், மத்திய அரசை எதிர்த்து பேசி அதிரடியாக நிதி கேட்பதாலும் மக்கள் கொண்டாடி விடுவார்கள் என நினைக்கிறார்கள். இக்காலகட்டத்தில் உதயநிதியை ஹீரோவாக தி.மு.க காண்பித்து கொண்டாலும் களத்தில் மக்களிடம் கோபம் இருக்கத்தான் செய்கிறது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.