2023இல் தேசத்தின் மிகப்பெரிய Foodie… அறிவித்த Zomato – அப்படி என்ன செய்தார்?

Year Ender 2023, Zomato: 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளதை அடுத்து நடப்பாண்டை தொடர்ந்து நினைவுகூர்ந்து வருகிறோம். அதேபோல், ஒவ்வொரு நிறுவனங்களும் இந்த ஆண்டில் அதன் மைல்கல் போன்ற சில தகவல்களையும் பகிர்ந்து வருகின்றன. தற்போது உணவு டெலிவரி நிறுவனமான Zomato இந்த 2023ஆம் ஆண்டில் அதிக முறை தங்களிடம் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிராமல், அதன் எண்ணிக்கையை மட்டும் பகிர்ந்துகொண்டுள்ளது. சில நாள்கள் முன் மற்றொரு நிறுவனமான Swiggy இதேபோன்ற தகவல்களை பகிர்ந்திருந்தது.

தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர்

Zomato நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் அதன் உணவு விநியோக டிரெண்ட் மொத்தத்தையும் பகிர்ந்துள்ளது எனலாம். அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் மும்பை சேர்ந்த ஒரு நபர் இந்த ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 580 முறை ஆர்டர் செய்துள்ளார். அதாவது, ஒரு நாளில் மட்டும் சராசரியாக அவர் 9 முறை Zomato செயலி மூலம் உணவை ஆர்டர் செய்திருக்கிறார். 

Zomato அவரை ஹனீஸ் என்று மட்டும் அடையாளம் காட்டியுள்ளது. மேலும், அவருக்கு 2023ஆம் ஆண்டின் “தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர்” (Nations Biggest Foodie) என்று பெயர் சூட்டியுள்ளது. மேலும், மும்பையில் உள்ள மற்றொரு வாடிக்கையாளர் ஒரே நாளில் 121 ஆர்டர்களை செய்துள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவும் டெல்லியும்…

பிற நகரங்களில் இருந்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை Zomato பகிர்ந்துகொண்டுள்ளது. அதிக காலை உணவு ஆர்டர்கள் பெங்களூரு நகர மக்கள் பதிவுசெய்ததாகவும், அதிக இரவு நேர ஆர்டர்களை டெல்லி நகர மக்கள் செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு Zomato பெற்ற விலை அதிகமான ஆர்டரை செய்துள்ளார். அவர் ஒரு ஆர்டரை 46 ஆயிரத்து 273 ரூபாய்க்கு செய்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த மற்றொரு வாடிக்கையாளர் Zomato வழியாக ரூ.6.6 லட்சம் மதிப்புள்ள 1,389 பரிசளிக்கும் ஆர்டர்களை மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றென்றும் பிரியாணி! 

இந்த ஆண்டு உணவு ஆர்டர் செய்யும் டிரெண்டிங்கை பார்க்கும்போது, பிரியாணி மற்றும் பீட்சா முதன்மையாக உள்ளன. 10.09 கோடிக்கும் அதிகமான பிரியாணி ஆர்டர்கள் மற்றும் 7.45 கோடிக்கும் அதிகமான பீட்சா ஆர்டர்கள் Zomato தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் ஸ்விக்கி வெளியிட்ட அறிக்கையின்படி, தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக பிரியாணியே அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக உள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் வினாடிக்கு 2.5 பிரியாணிகளை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு 1,633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார். 

மேலும் படிக்க | 2023இன் சிறந்த லேப்டாப்கள்… படிக்க, வேலை பார்க்க, கேம் விளையாட… தரமான டாப் 4 மாடல்கள்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.