ஜம்மு, ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஜம்மு – காஷ்மீரிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து, அங்கு ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேரா கி கலியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதை அறிந்த ராணுவ வீரர்கள், அப்பகுதிக்குள் தங்கள் வாகனங்களில் கடந்த 21ம் தேதி சென்றனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் பலியாகினர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, ஜம்மு – காஷ்மீர் முழுதும் உஷார்படுத்தப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மூன்று பேர் ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, அப்பகுதியினர் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின்படி அழைத்துச் செல்லப்பட்ட வர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக ‘வீடியோ’ பரவியதை அடுத்து, ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதனால், மூன்றாவது நாளாக நேற்றும் அங்கு இணையசேவை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பலியான வீரர்களுடன் பணியில் இருந்த வீரர்களிடம் அவர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
முதன்மை கமாண்டர் ஜெனரல் உபேந்திர திவேதி, ஜம்மு ஒயிட் நைட் கார்ப்ஸின் ஜெனரல் சந்தீப் ஜெயின் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement