At Sabarimala, Ayyappan will be dressed in a golden robe today and Deeparathanam: Mandal Pooja tomorrow at 10:30 am. | சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவித்து தீபாராதனை :நாளை காலை 10:30 மணிக்கு மண்டல பூஜை

சபரிமலை : சபரிமலையில் இன்று(டிச., 26) மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் மண்டல பூஜையுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும்.
கடினமான விரதம், முழுமையான அர்ப்பணிப்புடன் கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்கள் நடந்த மண்டல காலத்தின் நிறைவு பூஜை இன்றும், நாளையும் சபரிமலையில் நடக்கிறது. டிச.23-ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி இன்று மாலை சன்னிதானம் வந்தடையும். அந்த அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடைபெறும்.
நிறைவாக நாளை காலை 10:30 முதல் 11:30க்குள் மண்டல பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் ஐயப்பனுக்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பு கலபாபிஷேகம் நடந்து, தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடக்கும். இதனால் நாளை காலை 9:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடக்கும்.
நாளை இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும்.
தங்க அங்கி இன்று வருவதையொட்டி நிலக்கல் — பம்பை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 11:00 மணி வரை வரும் வாகனங்கள் மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல அனுமதிக்கப்படும். அதன்பின்னர் வரும் வாகனங்கள் மதியம் 2:00மணிக்கு பின்னர் தான் பம்பை செல்ல அனுமதிக்கப்படும்.
மேலும் இன்று மதியம் முதல் தங்க அங்கி சன்னிதானம் வந்து சேரும் வரை பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அதுபோல இன்று மதியம் 1:00 மணிக்கு அடைக்கப்படும் சபரிமலை நடை மாலை 5:00 மணிக்கு மட்டுமே திறக்கப்படும். மாலை 6:30 தீபாராதனைக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.