பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கடைகள், ஹோட்டல்களின் பெயர்ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இருத்தல் கட்டாயம்என்ற உத்தரவு, ஹிந்தி மற்றும் கன்னட மொழியினர் இடையிலான மோதலை அதிகரித்து உள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களை அங்கு நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு நடத்தப்படும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி இல்லை எனக் கூறி கர்நாடக ரக் ஷக் வேதிக் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, மார்வாடி சமூகத்தினரின் கடைகள் நிறைந்த பகுதியில் ஜீப்பில் நின்றபடி பேசி சென்ற பெண் ஒருவர், ‘இது கர்நாடகா, கன்னடர்கள்தான் இந்த மாநிலத்தின் பெருமை. மார்வாடியான நீங்கள் உங்கள் பெருமையை உங்கள் மாநிலத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தமுறை கன்னடம் தெரியாது என சொன்னால், அடுத்த இலக்கு நீங்கள்தான்’ கூறிச் சென்ற, ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள சாலையோர கடைகள் துவங்கி பெரிய மால்கள் வரையிலான இடங்களின் பெயர்ப்பலகையில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் என மாநகராட்சி உத்தரவிட்டுஉள்ளது.
‘உத்தரவை மீறுவோருக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும்’ என, மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடைகளின் பெயர் பலகையில் 60 சதவீத கன்னட எழுத்துக்கள் இடம்பெற அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
‘உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளின் உரிமம் முதலில், ‘சஸ்பெண்ட்’ செய்யப்படும். தொடர்ந்து மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி மொழியை குறிவைத்து கன்னட மொழி கட்டாயம் என்ற அறிவிப்பு, கர்நாடகாவில் மொழி பிரச்னை தொடர்பான மோதலை அதிகரித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்