லாகூர் :ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அந்நாட்டு பொது தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது.
குற்றச்சாட்டு
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018ல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் மேல் சிகிச்சைக்காக, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் சென்றார்.
பாக்.,கில் இம்ரான் கான் தலைமையிலான பாக்., தெஹ்ரீக் – இ – இன் சாப் கட்சி ஆட்சி நடந்தததை அடுத்து, நவாஸ் ஷெரீப் லண்டனிலேயே தங்கியிருந்தார்.
தற்போது அவரது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி நடப்பதை அடுத்து கடந்த அக்டோபரில் நாடு திரும்பினார்.
இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் அவர் வாழ்நாள் தகுதி நீக்க தண்டனை பெற்ற நிலையில், அந்த வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ல் நடக்கவுள்ள பாக்., பொதுத் தேர்தலில் போட்டியிட நவாஸ் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆட்சேபனை
இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஷ் கூறியதாவது:
‘அவென்பீல்ட் அபார்ட்மென்ட், அல் அஜீஜியா ஸ்டீல் மில்ஸ்’ ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, அவர் லாகூர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். எந்த ஆட்சேபனையுமின்றி அவை ஏற்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்து பெண் போட்டி!
பாக்., பொதுத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் சிறுபான்மையினரான ஹிந்து பெண் சவீரா பர்காஷ், 25, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். டாக்டரான இவர், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் மகளிர் அணியின் பொதுச்செயலராக உள்ளார். இவரது தந்தை, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 35 ஆண்டுளாக இருந்து வரும் நிலையில், அவரது வழியிலேயே மக்கள் சேவை செய்ய சவீரா முடிவு செய்துள்ளார். கடந்த 2022ல் மருத்துவக் கல்லுாரியில் பட்டம் பெற்ற சவீரா, புனேரில் இருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்