மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுந்ததுள்ளது.
இது குறித்து வார்னரிடம் நேற்று நிருபர்கள் கேட்ட போது, ‘தொடக்க வீரர் வரிசைக்கு யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை சொல்வது கடினம். இது தேர்வாளர்களின் முடிவை சார்ந்தது. என்னை பொறுத்த வரை மார்கஸ் ஹாரிஸ் அந்த வரிசைக்கு சரியாக இருப்பார் என்று கருதுகிறேன். அவரது திறமை மீது தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கினால், நிச்சயம் அவர் சிறப்பாக ஆடுவார்.
அவர் விளையாடும் விதம், அவரது ஷாட்டுகள் தொடக்க வரிசைக்கு பொருத்தமாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கூட அவர் சதம் அடித்தார்’ என்றார்.
31 வயதான மார்கஸ் ஹாரிஸ் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக 14 டெஸ்டுகளில் (3 அரைசதம் உள்பட 607 ரன்) விளையாடிய போதிலும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஆனால் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் 154 ஆட்டங்களில் ஆடி 27 சதம் உள்பட 10,343 ரன்கள் எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.