ஷிவமொகா : ”அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு ‘தினை மால்ட்’ வழங்கும் திட்டம் துவங்கப்படும். அரசு பள்ளிகளில் பற்றாக்குறையாக உள்ள 5,500 உடல்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,” என தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகா மாவட்டம், சொரபா இளங்கலை கல்லுாரி மைதானத்தில் நேற்று மாநில அளவிலான ஆண், பெண்களுக்கான ‘த்ரோ பால்’ போட்டியை, அமைச்சர் மது பங்காரப்பா துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல், மன வளர்ச்சிக்கு விளையாட்டு உதவுகிறது. மாணவர்கள் பாடத் திட்டத்துடன் கூடுதல் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
மாணவர்கள் இடையே மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர வாய்ப்பு அளிப்பதோடு, அரசு மற்றும் உள்ளூர் மக்களின் ஊக்கமும் அவசியம். பழைய நாட்டுப்புற விளையாட்டுகள் மறைந்துவிட்டன.
நாட்டின் சாதனையாளர்கள் வரிசையில் நம் குழந்தைகள் நிற்க சரியான நேரத்தில், ஊக்கம் அவசியம். உலகை ஊக்குவிக்கும் திறமைகள், உள்ளூரில் உள்ளன. இப்பள்ளிகளில் கலை, இலக்கியம், இசை, நடனம் உட்பட அனைத்து வகையான கல்வியும் பாடத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரத்தில், மாநிலத்தின் பெலகாவி, கலபுரகி,மைசூரு, பெங்களூரு ஆகிய பிரிவுகளில் இருந்து வந்திருந்த விளையாட்டு வீரர்களுக்கு தரமான காலணிகள், இரண்டு ஜோடி காலுறைகள் வழங்கப்படும். மாநில அரசு பள்ளிகளில் பற்றாக்குறையாக உள்ள 5,500 உடற்கல்வி ஆசிரியர்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிதித்துறை அனுமதியுடன் படிப்படியாக நிரப்பப்படுவர்.
கர்நாடகாவின் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தினை மால்ட் வழங்கும் திட்டம், அடுத்த கல்வியாண்டில் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement