புதுடெல்லி: அகத்தியர் தொடர்பாக ஆய்வு செய்து தமிழில் நூல்களை வெளியிட மத்திய கல்வித் துறையின் பாரத மொழிகளின் அமைப்பு(பாரதிய பாஷா சங்கம்) திட்டமிட்டுள்ளது. இந்த தகவல், உத்தரப்பிரதேசம் வாரணாசியின் காசி தமிழ் சங்கமம்-2 இல் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட ஏழாவது சித்த மருத்துவ தினத்தில் வெளியாகி உள்ளது.
நாட்டின் மிகப் பழமையானதாக சித்த மருத்துவம் உள்ளது. இது, மாமுனிவர் அகத்தியர் தலைமையிலான 18 சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி என்றெல்லாம் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுபவர் அகத்தியர். இவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் காசியில் பிறந்தவர் என்பார் போகர். இதனால், ஆண்டுதோறும் இந்த நாள் ’தேசியச் சித்த மருத்துவ தினம்’ எனக் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆறு வருடங்களாக 2016 முதல் இது, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா, உபியின் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம்-2 இல் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினரான செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகரன் பேசும்போது, ’சித்தர்களுள் அகத்தியரின் பெயரில் வழங்கிவரும் நூல்களே அதிகமாகும். அச்சேறியும் அச்சிடப்படாமலும் இருக்கும் நூல்களின் தோராயமான பட்டியல் 187. அச்சிடப்படாமல் உள்ள ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து வெளியிட்டால் ஏராளமான புதிய தரவுகள் கிடைக்கும். இப்பணியை, பாரத மொழிகளின் அமைப்பு செய்கிறது. இந்த ஆய்வினால், முச்சங்கங்கள் குறித்த வரலாறு மற்றும் புதிய தகவல்களை அறிதலுக்கான வழி ஏற்படுகிறது.’ எனத் தெரிவித்தார்.
மத்திய புள்ளிவிவரத்துறையின் துணை இயக்குநர் ஜெனரலான ஆர்.ராஜேஷ் பேசுகையில், ‘அகத்திய முனி ஒரு பன்முகத்திறமை கொண்டவர். உலகின் பழமையான மொழியான தமிழில் அகத்தியம் எனப்படும் முதல் இலக்கிய நூல் எழுதியவர். தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைபாடினியார், நற்றத்தனார், வாமனர் ஆகிய பன்னிருவரும் அகத்தியரின் சீடர்களாக விளங்கினர்.’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக இந்தியமுறை மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர்.ரகுராம் பட்டா, உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் அகஸ்தியரை பற்றிய ஆய்வாளருமான ஷாமா பட், பேராசிரியர் கமலேஷ் துவேதி ஆகியோரும் பேசினர். விழாவின் துவக்கத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் சரவணன் மற்றும் அருள்மொழி அகத்திய ஸ்துதி பாடினர். அகத்தியர் பற்றிப் பல்வேறு தொன்மக்கதைகள் காணப்படுகின்றன. இதன்படி, அகத்தியரின் பிறப்பே மனிதப் பிறவியில் இருந்து வேறுபட்டது.
தென்திசைக்கு வந்த அகத்தியர் முருகப்பெருமானிடம் உபதேசம் பெற்றார். அதன் பின்னர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். சித்தராய் விளங்கிய அகத்தியரைப் பற்றி “அகத்தியர் காவியம் பன்னிரண்டாயிரம்” வாயிலாகச் சில கருத்துகளை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் சித்த மருத்துவத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது. பல நோய்களுக்கும் மருத்துவ ஐயங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். ’அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள்’ எனும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியருக்குத் தமிழகமெங்கும் ஆலயங்கள் உள்ளன. அகத்தியர் பெயரில் ஊர்களும் இருப்பது நினைவுகூரத்தக்கது.