அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளி தம்பதியான ராகேஷ் கமல் (57), டீனா (54), 2019-ம் ஆண்டு EduNova என்ற கல்வி அமைப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, நடத்தி வந்தனர். இவர்களுக்கு அரியானா (18 ) என்ற மகள் இருந்தார். டோவர் நகரில் 11 படுக்கையறைகள் உடன் 19 ஆயிரம் சதுர அடி பரப்பில், 5 மில்லியன் டாலர், அதாவது 41 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு மாளிகையை 2019-ம் ஆண்டு இந்தத் தம்பதி வாங்கினர். அதில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூவரும் அந்த மாளிகையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், டிசம்பர் 2021-ல் அந்த நிறுவனம் திவால் ஆவதாக அறிவித்தனர். இது குறித்துப் பேசிய காவல்துறை, “இந்தக் குடும்பம் கடந்த 2 நாள்களாக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அழைத்தபோதும் யாரும் அழைப்பை ஏற்கவில்லை என்பதால், உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு நிதி சிக்கல்களை தம்பதி எதிர்கொண்டதாகத் தெரியவருகிறது.
இந்தச் சூழலில்தான் குடும்ப வன்முறை காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பிட்டிருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறது. வழக்கறிஞர் மோரிஸ்ஸி என்பவர் கூறுகையில், “காவல்துறை சொல்வதுபோல குடும்ப வன்முறையாக இது இருக்க வாய்ப்புகள் குறைவு.

இதற்கு முன்பு இங்கே சண்டை, அடிதடி என எந்தவொரு புகாரும் வந்ததே இல்லை. இங்கே குடும்ப வன்முறைக்கான அறிகுறி எதுவுமே இல்லை. விசாரணை மிகவும் ஆரம்பக் கட்டத்திலிருந்தாலும், தற்போது கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, யாரும் வெளியே இருந்து வந்து தாக்கியதாகத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, கடன் தொல்லையால் அவர்கள் இந்த மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.