புதுடெல்லி: இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டும் இதே உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் ( மன் கி பாத் ) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். இந்த வகையில், இன்றைய உரை 108வது மாதத்தின் உரை. இதில் அவர் கூறியதாவது: இன்று 108வது நிகழ்ச்சியில் இருக்கிறோம். 108 என்பது சிறப்பான ஒரு எண். இதுவரையிலான மனதின் குரல் நிகழ்ச்சிகளில் பல்வேறு எடுத்துக்காட்டுக்களைப் பார்த்திருக்கிறோம். பலரிடம் இருந்து உத்வேகம் பெற்றுள்ளோம். இந்த நிலையை அடைந்த பிறகு புதிய ஆற்றலுடன், புதிய வேகத்துடன் புதிதாக வளர வேண்டும் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். நாளைய சூரிய உதயம் 2024ன் புதிய உதயமாக இருக்கப் போகிறது.
தற்போது இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான எழுச்சி இது. 2024ம் ஆண்டிலும் இதே உணர்வை, வேகத்தை நாம் பராமரிக்க வேண்டும். சந்திரயான்-3ன் வெற்றிக்காக இன்றும்கூட பலர் எனக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்புகிறார்கள். நமது விஞ்ஞானிகள் குறித்து, குறிப்பாக நமது பெண் விஞ்ஞானிகள் குறித்து நான் பெருமை கொள்கிறேன். என்னைப் போலவே நீங்களும் பெருமை கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த ஆண்டு நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களையும் அவர்கள் வென்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தங்களின் செயல்பாடு மூலம் நமது வீரர்கள் நாட்டு மக்களின் மனங்களை வென்றனர். அடுத்ததாக, 2024ல் பாரிஸ் ஒலிக்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக, ஒட்டுமொத்த தேசமும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது.
புதுமை கண்டுபிடிப்புகளின் மையாக இந்தியா மாறும் வரை அது தனது ஓட்டத்தை நிறுத்தாது. 2015ல் சர்வதேச புதுமை கண்டுபிடிப்புகளுக்கான பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. இன்று நாம் 40வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம். ஃபிட் இந்தியா தொடர்பான கருத்துக்களை அனுப்புமாறு நான் உங்களைக் கேட்டுக்கொண்டேன். அதற்காக நீங்கள் காட்டிய உற்சாகம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவின் முயற்சி காரணமாக 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
உடல் ஆரோக்கியம் குறித்த ஆர்வம் நாட்டு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அதற்கான பயிற்சியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஜோகோ டெக்னாலஜிஸ் போன்ற புத்தாக்க நிறுவனங்கள், ஃபிட் இந்தியாவின் கனவை நனவாக்க பங்களிக்கின்றன. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு வந்தவர்களோடு நான் செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் உரையாடினேன். இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் இந்தியில் உரையாற்றினேன். அதனை அவர்கள் தமிழில் அப்போதே கேட்டார்கள். மொழிபெயர்ப்பு சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து இளைஞர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.