ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் (101 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் நடந்தது.
இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று கூறியது, ஆனால் நிலநடுக்கம் நிலத்தில் மையம் கொண்டிருப்பதால், பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு பல கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அங்கு மக்களிடையே பீதி ஏற்பட்டது.
வெறும் 62,250 மக்கள்தொகையுடன், அபேபுரா இந்தோனேசியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும். பிப்ரவரியில், மற்றொரு ஆழமற்ற நிலநடுக்கம் மாகாணத்தை உலுக்கியது, மிதக்கும் உணவகம் கடலில் இடிந்து விழுந்ததில் தப்பிக்க முடியாமல் நான்கு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.