ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில், அவர் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை அவர் சந்தித்துப் பேசினார். மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் கிடுகு ருத்ரராஜு, “ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, அவரது கிராண்ட் ஓல்ட் கட்சியுடன் விரைவில் இணைவார். அவரையும், அவரது கட்சியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களையும் வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வான ஆள ராமகிருஷ்ணா, கடந்த வாரத்தில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைச் செயலாளரிடம் வழங்கினார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கவில்லை. இந்த நிலையில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆள ராமகிருஷ்ணா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “எனது பயணம் ஒய்.எஸ்.ராஜசேகரின் பாதையில்தான். எனவே எனது அரசியல் பயணத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டால், அவருடன் நானும் இணைந்து செயல்படுவேன். ஷர்மிளா என்ன முடிவு எடுத்தாலும் அவருடன் இருப்பேன். எனது ராஜினாமாவை ஏற்பது அவர்கள் கையில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில், “ஷர்மிளா ஜனவரி 3 அல்லது 7-ம் தேதி டெல்லிக்குச் சென்ற பிறகு கட்சியில் சேருவார். அவர் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்படலாம் அல்லது 2024 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் நட்சத்திரப் பிரசாரகராக நியமிக்கப்படலாம்” என்று தகவல் வெளியாகியிருக்கிறது.