கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகிப்பவர் எஸ்.பி மது சந்திரா என்ற எஸ்.மது பங்காரப்பா. இவர் ஆகாஷ் ஆடியோ-வீடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.6.96 கோடிக்கான காசோலையை 2011-ம் ஆண்டு இவர் வழங்கியிருக்கிறார். ஆனால் அது பவுன்ஸாகி இருக்கிறது. இது தொடர்பாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தது.
மது பங்காரப்பா ரூ.50 லட்சம் செலுத்தப்பட்டுவிட்டதால், இந்த வழக்கை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு முழுப் பணத்தையும் செலுத்தத் தவறியதால், அவரது மனு 2022-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு 2022-ல் எம்.பி.க்கள் – எம்.எல்.ஏ-க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ப்ரீத் ஜே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், “ஆகாஷ் ஆடியோ-வீடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.பி மது சந்திரா (எஸ்.மது பங்காரப்பா), புகாரில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
எனவே, `மீதமுள்ள ரூ.6.10 கோடியை ஜனவரி 30, 2024 அல்லது அதற்கு முன்பு முழுமையாகச் செலுத்துவேன்’ என்ற எஸ்.மது பங்காரப்பாவின் உறுதிமொழியை நீதிமன்றம் ஏற்கிறது . இந்த உறுதிமொழி மீறப்பட்டால், 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் இந்த வழக்கை இவ்வளவு காலம் இழுத்தடிக்கும் அமைச்சரின் அணுகுமுறையை இந்த நீதிமன்றம் கண்டிக்கிறது” என உத்தரவிட்டிருக்கிறது.