பைக் பிரியர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக கடந்த மாதம் அமைந்தது. ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் முடிந்த அதே வேகத்தில் மோட்டோ சோல், இந்தியன் பைக் வீக், பல்சர் மேனியா என்று அடுத்தடுத்து பைக் திருவிழாக்கள் கோவாவிலும் மும்பையிலும் களைகட்டின. அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு நேரடியாகச் சேர்ப்பிக்கும் வண்ணம் நமது மோட்டார் விகடன் சேனலில் இந்தக் கொண்டாட்டங்கள் பற்றிய வீடியோக்களை நீங்களும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். அதே மகிழ்ச்சியோடு புத்தாண்டு பிறந்திருக்கிறது.
“பூங்கொத்து நீட்டி வரவேற்கும் இந்தப் புத்தாண்டில் என்னென்ன புதிய கார்கள் வரப்போகின்றன… அவற்றுக்கு நாம் காத்திருக்கலாமா?” என்கிற கேள்விக்கு இந்த இதழில் தெளிவான விடையைக் கொடுத்திருக்கிறோம். 25 ஆண்டுகளாக நின்று ஆடும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் துவங்கி, மாருதி சுஸூகி டிசையர், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹேரியர், மஹிந்திரா தார் 5 டோர், மஹிந்திரா XUV300, கியா சோனெட் என்று எல்லா செக்மென்ட்டிலும் வரப்போகும் கார்களில் என்னவெல்லாம் புதிய அம்சங்கள் சேர இருக்கின்றன. டிசைனிலும் இட வசதியிலும் மாற்றங்கள் என்ன ஆகிய விவரங்களை எல்லாம் கொடுத்திருக்கிறோம் என்பதால் இவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த கார், சிறந்த பைக், சிறந்த மின்சார கார், சிறந்த மின்சார பைக்… எது… என்று சென்ற இதழில் கேட்டிருந்தோம். உற்சாகமாக நீங்கள் அளித்திருந்த பதில்கள் இந்த ஆண்டின் மோட்டார் விகடன் விருதுகளை இறுதி செய்வதற்கு எங்களுக்குப் பெரும் உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தன.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் அதேவேளையில், உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் நல்வாழ்த்துகள்!
– ஆசிரியர்