மதுரை: மதுரையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்துக்கு சிலை வைக்க, காங்கிரஸ் எம்பி, மாணிக்கம் தாகூர் மற்றும் அக்கட்சியின் மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி மறைந்தார். அவரது மறைவையொட்டி, அவரது சொந்த ஊரான மதுரையில் தேமுதிகவினர் மட்டுமில்லாது பொதுமக்கள் பொதுஇடங்களில் அவரது உருவப்படத்தை அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து மாற்றுக்கட்சிகளில் இணைந்தவர்களும் நடிகர் விஜயகாந்த் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் சென்னை சென்று அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே நடிகர் விஜயகாந்த் வீடு உள்ளது. அந்த வீட்டில் தற்போது விஜயகாந்த் தம்பி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது குடும்பத்துக்கு சொந்தமாக கீரைத்துரையில் உள்ள அரிசி ஆலை தற்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஆலையை அவரது குடும்தினர் மற்றொருவரிடம் வாடகைக்கு விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த், தேமுதிகவை மதுரையில்தான் தொடங்கினார். சினிமா படப்பிடிப்பு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும்போதும், தனது தாய், தந்தை நினைவு நாட்களின்போதும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து குடும்பத்தினரை சந்தித்து சென்றார்.
சென்னையில் விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், விஜயகாந்த்தின் சொந்த ஊரான மதுரையிலும் அவரது நினைவைப் போற்றும் வகையில் சிலை அல்லது மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்கள், கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி., மாணிக்கம் தாகூர், நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் பிறந்த ஊரான மதுரையில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதற்கு மதுரை மாநகராட்சி இடம் கொடுத்து, சிலை வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் மேயர் இந்திராணிக்கு கடிதம் எழுதி உள்ளார். தேமுதிகவினர் கூட இன்னும் நேரடியாக இதுதொடர்பாக மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்காதநிலையில், விஜயகாந்த் இறந்த தினத்தன்றே, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த எம்பியான மாணிக்கம் தாகூர், மதுரையில் விஜயகாந்த்துக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம் அனுப்பியிருந்தார். அவர் மூலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மதுரை மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள் என்னிடம் நேரடியாக விஜயகாந்துக்கு மதுரையில் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கை அமைச்சர்கள் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்’ ’என தெரிவித்தார்.