ஆக் லேண்ட் (நியூசிலாந்து): நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரம் 2024 புத்தாண்டு வரவேற்கும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. உயரமான கட்டிடமான ஸ்கை டவர், டவுன்டவுணில் இருந்து வெளிப்படும் வண்ண வான வேடிக்கைகளும் மக்களின் ஆராவாரங்களும் இதற்கு கட்டியம் கூறுகின்றன.
உக்ரைன் மற்றும் காசா போர்ச்சூழல் பல்வேறு நகரங்களில் கொண்டாட்ட மனநிலையை முடக்கி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில புத்தாண்டுக்கு முந்தைய கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆக்லேண்ட் நகரில் 328 மீட்டர் (1,706 அடி) உயரத்திலுள்ள கண்காணிப்பு மற்றும் தொடர்பு கோபுரத்தில் அமைந்துள்ள டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் புத்தாண்டுக்கான கவுண்டவுன் தொடங்குவதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மிதமான மழை பொழிந்து நகரிலுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கும் புத்தாண்டினை முன்னறவிப்பு செய்துகொண்டிருந்தது.
இங்கு புத்தாண்டு தொடங்கிய இரண்டு மணிநேரத்துக்கு பின்பு அருகாமையில் உள்ள நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னியுள்ள துறைமுக பாலம் நன்கு அறியப்பட்ட நள்ளிரவு வானவேடிக்கை மற்றும் வண்ண விளக்கு காட்சிகளுக்கு சாட்சிளாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக் காண்பதற்காக சிட்னியின் 1 மில்லியன் மக்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்காக முன்னெப்போதையும் விட அதிமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும், நகரில் ஐந்தில் ஒருவர் துறைமுக நீர்முனை அருகில் கூடியுள்ளனர் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்.7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சிட்னியின் ஓப்ரா ஹவுசில் இஸ்ரேல் ஆதரவாளர்கள் அந்நாட்டு கொடியினை வைத்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய கொண்டாட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது.
இதனிடையே வாடிகன் நகரத்தின் புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த பாரம்பரிய ஞாயிறு ஆசீர்வாத கூட்டத்தின் போது போப், பிரான்சிஸ், 2023ம் ஆண்டை போர்களின் ஆண்டாக நினைவு கூர்ந்தார். அவர் காயம்பட்டிருக்கும் உக்ரேனிய மக்கள் மற்றும் இஸ்ரேலிய, பாலீஸ்தீன மற்றும் சூடான் மக்களுக்காக பிரார்த்தனை செய்தார். ஆண்டின் இறுதியில் ஆயுதமேந்திய போராட்டத்தினால் எவ்வளவு மனித உயிர்கள் சிதைக்கப்பட்டுள்ளன, எவ்வாளவு பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பேர் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர், எவ்வளவு பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் தைரியம் எத்தனை பேருக்கு உள்ளது என்று போப் கூறினார். இந்த மோதல்களில் ஆர்வம் உள்ளவர்கள் மனசாட்சியின் குரலைக்கேளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின், நியூயார்க் டைம்ஸ் சதுக்க அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், நகரின் மையப் பகுதியான மிட் டவுண் மான்ஹாட்டனுக்கு வரும் ஆயிரக்கணக்கானவர்களை வரவேற்க தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர். நியூயார்க் நகர மேயர் கூறுகையில், புத்தாண்டு ஈவ் கொண்டாட்டத்துக்கு குறிப்பிடத் தகுந்த அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
பிரான்சில், 90,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று உள்ளூர் உளவுத்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும் அவர்களில் 6000 பேர் பாரீஸில் நிறுத்தப்படுவார்கள். அங்குள்ள Champs-Elysees நடக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக 1.5 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
உக்ரைன் உடனான போர் காரணமாக ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள செஞ்சதுக்க மைதானத்தில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடக்கும் வானவேடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தானிலும், பாலஸ்தீனியர்களின் துக்கத்தில் பங்கேற்கும் விதமாக அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் அரசு தடைவிதித்துள்ளது.