புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளித்த மாணவ, மாணவியர் 4 பேர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களின் மகள்கள் மோகனா (16), லேகா (14). சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில் மோகனா பிளஸ் 2 வகுப்பிலும், லேகா 10-ம் வகுப்பிலும் படித்து வந்தனர். இவர்களது நண்பர்களான எல்லைப் பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான நவீன், கேட்டரிங் கல்லூரி மாணவர் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கிஷோர்(17) ஆகியோர் மீனாட்சி மற்றும் அவரது மகள்களுடன் புத்தாண்டை முன்னிட்டு இன்று புதுச்சேரி பழைய துறைமுகம் அருகேயுள்ள ராக்பீச் கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளனர்.
அவர்கள் கடற்கரையில் இருந்த நிலையில், மீனாட்சி மணற்பரப்பில் உட்கார்ந்திருந்துள்ளார். அப்போது மோகனா உள்ளிட்ட 4 பேரும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் மோகனா, லேகா மற்றும் நவீன், கிஷோர் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். அவர்களை காப்பாற்றும்படி மீனாட்சி கூச்சலிட்ட போது அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அலைச் சீற்றத்தில் 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த ஒதியன்சாலை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்கள் துணையுடன் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. எஸ்பி சுவாதி சிங் கடற்கரைப் பகுதிக்கு வந்து மாணவ, மாணவியரை அழைத்து வந்த மீனாட்சியிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு கடற்கரைக்கு வருவோர் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் இறங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை மீறி கடலில் இறங்கி குளித்த மாணவ, மாணவியர் மாயமான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.