சுற்றுலாவுக்காக புதுச்சேரிக்கு வரும் அயல் நாடுகள் மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், கடற்கரைக்கு செல்வதையே விரும்புவார்கள். அப்படி செல்லும் அவர்களும், உள்ளூர் மக்களும் காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிப்பது வழக்கம். அப்படியான தருணங்களில் ராட்சத அலையில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. தற்போது, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்திருக்கின்றனர். அதேபோல அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இருக்கும் சிறுவர், சிறுமியரும் தங்கள் பெற்றோருடன் தினமும் கடற்கரைக்கு வருகின்றனர். தற்போது புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கும்நிலையில், கடற்கரையில் அவர்களும், பொதுமக்களும் கடலில் இறங்கி குளிக்காதவாறு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த தடுப்பையும் மீறி புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆர்.நகரைச் சேர்ந்த சீனிவாசன், மீனாட்சி தம்பதியின் மகள்களான 16 வயது மோகனா மற்றும் 14 வயதுடைய லேகா இருவரும், பழைய துறைமுகப் பகுதி அருகில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அதேபோல் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது நவீன் மற்றும் அவரது நண்பர் கிஷோர் இருவரும் அதே பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி நான்கு பேரும் கடலில் மாயமாகினர். கண்ணிமைக்கும் நேரத்தில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகள் காணாமல்போனதைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஒதியஞ்சாலை போலீஸார், கடலோரக் காவல்படை மற்றும் மீனவர்கள் உதவியுடன் மாயமான சிறுவர், சிறுமியரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் புத்தாண்டை வரவேற்க காத்திருந்த புதுச்சேரி மாநிலம், சோகத்தில் உறைந்திருக்கிறது. இது குறித்து ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதியிடம் பேசினோம். “கடலில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்திருக்கிறோம். தொடர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் சிலர், எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்கின்றனர். சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி மாயமாகியிருக்கின்றனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.