மாஸ்கோ,
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 676வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, உக்ரைனின் கீவ், டின்புரொ, கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரஷியா தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 160 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது உக்ரைன் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ரஷியாவின் பெல்ஹொரட் நகர் மீது உக்ரைன் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 110 பேர் படுகாயமடைந்தனர்.