அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்ஷேத்ரா அறக்கட்டளை கவனித்து வருகிறது. இக்கோயில் ஜன. 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கிறார். மேலும், முக்கிய பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் அறக்கட்டளை சார்பில், கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து அறக்கட்டளையின் அறங்காவலர் பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா நேற்று முன்தினம் கூறியதாவது:
ராமர் சிலையை தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடைபெற்றது. பல சிலைகளை ஒன்றாக வைத்தாலும், எது சிறந்ததோ அதன்மீது கண்கள் நிலைத்து நிற்கும். அந்த வகையில் நான் ஒரு சிலையை விரும்பினேன், அதற்குஎனது வாக்கை செலுத்தினேன். மற்றவர்களும் தாங்கள் விரும்பிய சிலைக்கு வாக்களித்தார்கள். இதன் மூலம் சிலையைத் தேர்வுசெய்வது தொடர்பான செயல்முறை நிறைவடைந்துள்ளது. ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலை பிரதிஷ்டைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.