2023 Rewind: பொம்மன்,பெள்ளி ஏமாற்றம் முதல் அமீர்-ஞானவேல் பஞ்சாயத்து வரை- சினிமா ஒரு குட்டி ரீவைண்ட்

=இந்த ஆண்டு திரையுலகில் நடந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் சர்ச்சைகளும் பெரும் பேசுபொருளாகியிருந்தன. இந்தச் சம்பவங்கள் சமூகத்திலும் பேசுபொருளானது என்றே சொல்லலாம். அப்படியான சம்பவங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு குட்டி ரீவைண்ட்தான் இது.

ஆஸ்கார் விருதும்; பொம்மன், பெள்ளியின் ஏமாற்றமும்!

பொம்மன் – பெள்ளி

ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்த உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் இந்த ஆண்டிற்கான ‘கோல்டன் குளோப்’, ‘6வது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்று பாராட்டுகளைப் பெற்றது.

சிறந்த ஆவணக்குறும்படத்திற்கான விருதினை கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய ‘The Elephant Whisperers’ பெற்றது. இந்த ஆவணப்படத்தின் மூலம் பொம்மன், பெள்ளி, கார்த்திகி கொன்சால்வ்ஸ், ரகு பொம்மி யானைகள் மற்றும் தெப்பக்காடு முகாம் என அனைத்துமே உலக அளவில் கவனம் பெற்றது. சிறப்பாக யானைகளை வளர்த்த பொம்மன், பெள்ளி இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்தன.

ஆனால், ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த இவர்களுக்கு இயக்குநர் கார்த்திகி பணம் ஏது தராமல் ஏமாற்றியதாக வந்த புகார்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தின. அதுவும், ‘கல்யாணம் பண்ணுற மாதிரி வீடியோ எடுக்கணும். ஊர் மக்களுக்கு சாப்பாடு, கோயில் செலவுக்கு உங்கள் பணத்தைக் கொடுங்க. அப்புறமா திருப்பிக் கொடுக்கிறேன்னு கார்த்திகி சொன்னாங்க. என்னோட மகள் இறந்தப்ப வந்த பணத்தை பேத்திக்காக போஸ்ட் ஆபீஸ்ல சேத்து வச்சிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து செலவு செஞ்சோம். இப்போவரை அந்தப்‌ பணத்தை கார்த்திகி திரும்ப கொடுக்கலை” என்று கண் கலங்க பெள்ளி கூறியதெல்லாம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தேசிய விருதுகளும் தென்னிந்திய திரைப்படங்களும்

கடைசி விவசாயி

இந்த ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளின் போட்டியில் சிறந்தத் திரைப்படத்திற்கான விருது மாதவன் இயக்கி நடித்திருந்த ‘ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்கும், சிறந்த நடிகர் – நடிகைக்கான விருது அல்லு அர்ஜூன் மற்றும் ஆலியா பட்டிற்கும் வழங்கப்பட்டது. ‘ஆர்.ஆர்.ஆர்’ 6 விருதுகளையும், ‘கங்குபாய் கத்யாவாடி’ மற்றும் ‘சர்தார் உதம்’ 4 விருதுகளையும் வென்றது.

தமிழில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்திற்கும், அதில் நடித்த மறைந்த நல்லாண்டிக்கு ஸ்பெஷல் மென்ஷனில் விருதும் வழங்கப்பட்டது. ‘இரவின் நிழல்’ படத்தின் ‘மாயவா சாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர சிறந்த கல்வித் திரைப்படத்திற்கான விருது லெனின் இயக்கிய  ‘சிற்பங்களின் சிற்பங்கள்’  படத்திற்கும், ‘கருவறை’ – குறும்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவிற்கு ‘சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

போட்டியில் இருந்த ‘ஜெய்பீம்’, ‘சர்ப்பட்டா பரம்பரை’ படங்களுக்கு விருது கிடைக்காமல் போனது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தையே அளித்திருந்தது. இருப்பினும், ‘கடைசி விவசாயி’,  ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ கருவறை’ போன்ற படைப்புகளுக்கும், ‘நல்லாண்டிக்கு’ தேசிய விருது வழங்கப்பட்டதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

மறக்குமா நெஞ்சம்… களேபரமான மியூசிக் கான்சர்ட்!

மறக்குமா நெஞ்சம் மியூசிக் கான்சர்ட்

இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்ய ராம் பேலஸ் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் 25 ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, கிட்டத்தட்ட 50,000 பேர் கூடும் அளவுக்கு டிக்கெட் விற்பனை செய்து போதுமான இருக்கைகள், ஸ்பீக்கர், குடிநீர், சுகாதாரம், பார்க்கிங் என எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் அதிருப்தியில் புகார் அளிக்க சமூக வலைதளமே களேபரமானது. பலரும் நிகழ்ச்சியைக் காண முடியாமல் பாதியிலேயே வீடு திரும்பினர். அன்று மாலை முதல் இரவு வரை ஈ.சி.ஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தக் கூட்டத்தால் ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முதல்வரின் கான்வாய் வாகனமே சிக்கியதால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டது பெரும் பேசுபொருளாகி இருந்தது.

லஞ்சம் கேட்கும் தணிக்கைக் குழு; விஷால், சமுத்திரக்கனியின் கவலை!

விஷால்

நடிகர் விஷால், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெற ரூ.6.5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று மும்பை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். விஷாலின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், “இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கமளித்தது.

இதையடுத்து நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியும், “2016ல் வெளியான என் ‘அப்பா’ படத்திற்கு வரிவிலக்கு வாங்க என்னிட லஞ்சம் கேட்டார்கள், அதைக் கொடுத்தப் பிறகே படம் வெளியானது” என்று குற்றம் சாட்டினர். நீண்ட நாட்களாவே இது நடந்து வருவதாகப் பலரும் தங்கள் அதிப்திகளைத் தெரிவித்திருந்தனர்.

ரசிகர்களை உசுப்பேற்றிய காக்கா கழுகு கதைகள்!

ரஜினி – விஜய்

இந்த ஆண்டு பெரும் வசூல் போட்டி போட்ட படங்கள் ‘ஜெயிலர்’ மற்றும் ‘லியோ’. இதன் விழா மேடையில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்விகளுக்கு ரஜினியும், விஜய்யும் மாறிமாறி காக்கா-கழுகு கதைகள் சொன்னது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்திருந்தது. இது ரசிகர்களை உசுப்பேற்ற இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களும் மாறிமாறி சமூகவலைதளங்களில் சண்டை போட்டுக்கொள்ள ஒரே களேபரமானது. அதுவும் நம்பருக்கு நம்பர் இரண்டு படங்களும் போட்டிபோட்டு வசூல் கணக்குக் காட்ட சமூக வலைதளமே களேபரமானது.

கருங்காலி மாலை அலப்பறைகள்

தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன்

லோகேஷ் கனகராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன் ‘கருங்காலி மாலை’ போட்டிருப்பதைப் பார்த்து பலரும் அதை தீவிரமாகத் தேடி கடைகளுக்குப் படையெடுத்தனர். இது பூதகரமாகி சமூகவலைதளம், யூடியூப் என எங்கே சென்றாலும் ‘கருங்காலி மாலையும், அதன் சிறப்புகளும்’ என வீடியோக்கள் நிரம்பி வழிந்தன. கருங்காலி மாலையும் ஆயிரங்களில் விற்பனையாகி திடீர் ட்ரெண்டிங்கானது.

மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு

த்ரிஷா – மன்சூர் அலிகான்

லியோ படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான், ‘நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது, சில சீன்களெல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை’ என்று ஆட்சேபிக்கும் வகையில் பேசியிருந்தார். இதனைக் கண்டித்து த்ரிஷா தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சைக் கண்டித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, சின்மயி, குஷ்பூ  உள்ளிட்ட பல திரைப் பிரலங்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தயாரிப்பாளர் சங்கமும் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூற, மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கப்பதிவு செய்திருந்தது.

இப்படி இப்பிரச்னை நாளுக்குநாள் கோலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்த, நடிகர் சிரஞ்சீவி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் குறித்து முகம் சுழிக்கும் வகையில் பேசியதை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் வைரல் செய்து வந்ததெல்லாம் தனிக்கதை.

இறுதியாக நடிகர் மன்சூர் அலிகான், “எனது சக திரைநாயகி த்ரிஷாவே, என்னை மன்னித்துவிடு!” என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து இப்பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வர த்ரிஷாவும் “தவறு செய்வது மனிதர்களின் குணம், மன்னிப்பது இறைவனின் குணம்” என்று ட்வீட் செய்திருந்தார்.

ஒருவழியாக முடிந்த இந்தப் பிரச்ச்னையை மன்சூர் அலிகான் மீண்டும் கிளர, ‘முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். `இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாதானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்?’ என நீதிமன்றம் மன்சூர் அலிகானைக் கண்டித்து இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தது.

விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் பாய்ச்சல்

விஜய்

இந்த ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் அரசியலை நோக்கி தீவிரமாகத் தயாராகத் தொடங்கியிருக்கிறது.

2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்து, “மாணவர்கள் நிறைய புத்தகங்களைப் படிக்கவேண்டும். முக்கியமாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று பேசியிருந்தது மக்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது.

இதைத்தொடர்ந்து ‘விஜய் பயிலரங்கம்’,  ‘தளபதிவிஜய் நூலகம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி தீவிரமாக மக்கள் பணியில் இறங்கியுள்ளது. இது விஜய்யின் அரசியல் வருகையை உறுதிப்படுத்துகிறது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வரவேற்றனர். தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார். விஜய்யின் இந்த அரசியல் சார்பான நடவடிக்கை சினிமாவிலும் அரசியலிலும் ஹாட் டாப்பிக்காக இருந்தது.

பருத்திவீரன்: அமீர்- ஞானவேல் ராஜா பஞ்சாயத்து

அமீர், ஞானவேல்ராஜா

`பருத்திவீரன்’ படம் குறித்தும் இயக்குநர் அமீர் குறித்தும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது கோலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

நடிகர் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ இசை வெளியீட்டு விழாவிற்கு அமீர் அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த அமீர், தன்னை யாரும் அழைக்கவில்லை என்றும் சிவக்குமார், சூர்யா, கார்த்தியுடன் பேசாமால் போனதற்கு ஞானவேல் ராஜாதான் காரணம் என்றும் மனம் திறந்து பேசினார். இதற்கு ஞானவேல் ராஜா, ‘பருத்திவீரன்’ படத்தில் ‘அமீர் சரியாகக் கணக்கு காட்டாமல் ஏமாற்றினார்’ என்றும் ‘படம் எடுக்கத் தெரியாத அமீருக்கு நான்தான் வாய்ப்புக் கொடுத்தேன். இதுதான் அவர் சிவக்குமார் குடும்பத்துடன் பேசாமல் போனதற்குக் காரணம் ‘ என்றும் காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது ஞானவேல்ராஜா முன் வைத்த குற்றச்சாட்டுகள் போலியானது என்றும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது என்றும் கோலிவுட்டில் நன் மதிப்பைப் பெற்ற சமுத்திரக்கனி, சசிகுமார், கரு.பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன் உள்ளிட்ட பலரும் அமீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். சமூக வலைதளங்களிலும் அமீருக்கு ஆதவராகப் பலரும் பதிவிட்டு வைரலாக்கினர். பின்னர் இதற்கு ஞானவேல்ராஜாவும் வெறுமனே வருத்தம் தெரிவிக்க, அமீர் மீதானப் போலியான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சமுத்திரக்கனி, கரு. பழனியப்பன் எனப் பலரும் அதிரடியாகப் பேசியிருந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமீரும், தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்து, கடன் வாங்கி படத்தை முடித்துக் கொடுத்து ஏமாந்தது குறித்தும் வெளிபடையாகப் பேசி “நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என்னுடைய உரிமையை! நடந்தது இதுதான்!” என்று தெளிவுபடுத்தியிருந்தார். இது கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகி இருந்தது.

இப்படி இந்த ஆண்டு பல்வேறு சம்பவங்கள் திரையுலகில் நடந்து பேசுபொருளானது. இவை தவிர, இந்த ஆண்டு திரையுலகில் நடந்த வேறு சில தரமான சம்பவங்களையும், சர்ச்சைகளையும் கமென்ட்டில் பதிவிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.