மும்பை : மஹாராஷ்டிராவில் கையுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், உறக்கத்தில் இருந்த ஆறு தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் வாலஜ் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு ஏராளமான சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள கையுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று அதிகாலை 02:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. ரப்பர் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென பரவியது.
அந்த சமயத்தில், வடமாநிலங்களைச் சேர்ந்த 13 தொழிலாளர்கள் பணி முடிந்து, ஆலையிலேயே துாங்கிக் கொண்டிருந்தனர்.
கடும் வெப்பத்தால் துாக்கத்தில் இருந்து விழித்த அவர்கள், வெளியேறும் வழியை அணுக முடியவில்லை. அப்பகுதி முழுதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் தீ விபத்தில் சிக்கி ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஏழு பேர் மேற்கூரையை உடைத்து கொண்டு அருகே இருந்த மரக்கிளை வாயிலாக அந்த இடத்தில் இருந்து தப்பினர்.
தீ விபத்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், விடிவதற்குள் தீயைக் கட்டுப்படுத்தி உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்ததுடன், தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement