வாஷிங்டன் : ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படை, செங்கடல் வழியாகச் சென்ற டென்மார்க்கிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அவர்களுக்கு அமெரிக்க போர் கப்பல் பதிலடி தந்தது.
பயங்கரவாத அமைப்பு
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படை செயல்படுகிறது.
இவர்கள், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால், செங்கடல் வழியாக இஸ்ரேல் சென்று வரும் சரக்கு கப்பல்களை அழிப்போம் என அறிவித்தனர். அதன்படி கடந்த நவம்பர் மாதம் முதல் பல சரக்கு கப்பல்களை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக தாக்கி வருகின்றனர்.
இதனால் அமெரிக்கா, செங்கடல் வர்த்தக வழியை பாதுகாக்க பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளுடன் இணைந்து ஹவுதி எதிர்ப்பு படையை உருவாக்கியுள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்த ஐந்து போர் கப்பல்கள் தெற்கு செங்கடல், வடக்கு ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன.
அமெரிக்கா அமைத்த கூட்டமைப்பில் நேற்று முன்தினம் டென்மார்க் நாடு இணைந்தது. இந்நிலையில், நேற்று சிங்கப்பூரிலிருந்து செங்கடல் வழியாக எகிப்து துறைமுகம் நோக்கி சென்ற, டென்மார்க்கிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, ஹவுதி படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ரோந்து பணி
ஏமன் நாட்டில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக சரக்கு கப்பலில் இருந்து ரோந்து பணியிலிருந்த அமெரிக்க போர் கப்பலிடம் உதவி கோரப்பட்டது.
களத்தில் இறங்கிய யு.எஸ்., கிரேவ்லி போர் கப்பல், சரக்கு கப்பலை குறி வைத்து ஏவப்பட்ட அடுத்தடுத்த இரண்டு ஏவுகணைகளை வானிலேயே அழித்தது. இதனால் சரக்கு கப்பல் பெரிய சேதமின்றி தப்பியது. கப்பல் ஊழியர்களும் காயமின்றி உயிர் தப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement