தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்தியா மிகவும் மோசமாக விளையாடியதாக பலரும் தங்கள் அதிருப்பதியைத் தெரிவித்தனர். அதிலும், மிகுந்த நம்பிக்கையுடன் அணியில் எடுக்கப்பட்ட சுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் மற்றும் 2வது இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சும்பன் கில்லுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமான பாணியில் விளையாடுகிறார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுடன் ஒப்பிடும்போது டெஸ்ட் கிரிக்கெட் சற்று வேறுபட்டது. ரொம்பவும் வித்தியாசமானது.ஒரு நாள் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்துடன் ஒப்பிடும்போது டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்து காற்றிலும், பிட்ச்சிலும் சற்று விலகிச் செல்லக்கூடியது. அதுமட்டுமின்றி சிவப்பு பந்து கூடுதலாக பவுன்ஸாகும் தன்மை கொண்டது. இதை மனதில் வைத்து கவனத்துடன் சுப்மன் கில் விளையாட வேண்டும்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.