‘லியோ’வுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் எனப் பறந்த யூனிட், அடுத்தும் அதிரடியான லொகேஷன்களில் படமாக்கவிருக்கிறது. விஜய்யின் சமீபத்திய படங்களான ‘வாரிசு’, ‘லியோ’ படங்களைப் போல, ‘தளபதி 68’ படத்திலும் பிரசாந்த், பிரபு தேவா, ‘மைக்’ மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே குவிந்து வருகிறது. இதில் மாளவிகா ஷர்மாவை அடுத்து, ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
விஜய்யின் ‘புதிய கீதை’ படத்திற்குப் பின், இப்படத்தில் விஜய்யுடன் யுவன் இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய் 19 வயது இளைஞர் தோற்றத்தில் கூடுதல் சிறப்பாக இருக்கிறது.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்றோ அல்லது டிசம்பர் 31ம் தேதி அன்றோ இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதை உறுதி செய்யும் வகையில் வெங்கட் பிரபு, “அப்டேட்கள் விரைவில் வந்துகொண்டிருக்கின்றன” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அவ்வகையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இளம் வயது விஜய்யும், நடுத்தர வயதில் இருக்கும் விஜய்யும் மிஷனை முடித்துவிட்டு பாராசூட்டில் இறங்கி வருவதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘Light can Devour the Darkness but Darkness cannot consume the Light’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.