2024: ஸ்மார்ட் போன் டூ சுற்றுலா… இலக்குகளை நிறைவேற்ற முதலீடு செய்யும் வழிகள்…

ஸ்மார்ட் செல்போன், டூ வீலர், டிரிப், தங்க நகை, கடன் அடைப்பது, பார்டனருக்கு கிப்ட் – இவை எல்லாம் பம்பர் பரிசு என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு ஆண்டு தொடங்கும்போதும் இப்படி ஏகப்பட்ட விஷயங்களை தீர்மானங்கள் (resolutions) ஆக எடுப்பது வழக்கம். சில விஷயங்களை எளிதாக சுய ஒழுக்கம் மூலம் நிறைவேற்றி விடலாம். ஆனால் சிலவற்றிருக்கு நிச்சயம் நிதி அவசியம்.

உங்கள் ரீசல்யூசனில் எந்தெந்த நிதி சார்ந்த விஷயங்களை ஒரு ஆண்டிற்குள் பிளான் செய்திருக்கிறீர்களோ…அதை எப்படி நிறைவேற்றலாம் என்பதை பார்க்கலாம்…வாங்க…

லலிதா ஜெயபாலன்

குடும்ப நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன்:

ஒரு ஆண்டிற்குள் முதலீடு செய்து அதிகம் லாபம் பார்ப்பது மிக மிக கடினம். ஆனால் எதாவது ஒரு இலக்கை கட்டாயம் ஒரு ஆண்டிற்குள் செய்தே ஆக வேண்டும் என்றால் ரெக்கரிங் டெபாசிட் தான் பெஸ்ட் சாய்ஸ்.

2024-ம் ஆண்டில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறைந்தால் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட்டுக்கு நல்ல மவுசு ஏற்படும். ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் கடன் மற்றும் பங்குச் சந்தையில் கலந்து முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். 2024-ம் ஆண்டின் முதலீட்டு லிஸ்டில் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டும் நல்ல ஆப்ஷன்.

இந்த ஆண்டில் ஏதாவது வாங்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட அந்த பொருளுக்கு ஒதுக்கும் பணத்தை இரண்டாக பிரித்து ஆர்.டியிலும், ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். உதாரணமாக, ஒரு மொபைல் போன் வாங்க மாதம் ரூ.5,000 சேமிக்கிறார்கள் என்றால் ரூ.2,500-ஐ ஆர்.டியிலும், ரூ.2,500-ஐ ஹைபிரிட் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.

ஆர்.டியை பொறுத்தவரை பெரிய வங்கிகளைவிட, சிறிய வங்கிகளில் அதிக வட்டி தருகிறார்கள். அதனால் எத்தனை ஆண்டுக்கு போட்டாலும், எந்த தேவைக்கு போட்டாலும் இந்த மாதிரியான வங்கிகளை ஆர்.டிக்கு தேர்ந்தெடுப்பது நல்லது.

தங்கம்: நகையா? முதலீடா?

தங்கம் வாங்குவதை ஓர் இலக்காக வைத்திருந்தால், அதை இரண்டாக பிரிக்க வேண்டும். ஒன்று நகை…இன்னொன்று முதலீடு. நகையாக வாங்க வேண்டும் என்று எண்ணினால் 10+1 நகை சீட்டு திட்டத்தில் காசு போடலாம். ஆனால் அதையும் கவனமாக தேர்ந்தெடுப்பது முக்கியம். முதலீடு என்றால் கோல்டு் மியூச்சுவல் ஃபண்ட் நல்ல ஆப்ஷன். ஆனால் இது ஓராண்டிற்கானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

போன் மாதிரியான சின்ன சின்ன பரிசு பொருட்களுக்கு 6 மாதத்திற்கு மட்டும் கிடைக்கும் No cost EMI-ஐ பயன்படுத்தலாம். ஆனால் இந்த அனைத்து இலக்குகளுக்கு ஒரு செக் மேட் கடன் அடைப்பது தான். கடன் இருந்தால் எத்தனை இலக்குகள் இருந்தாலும், கடன் அடைப்பது தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும். சேமிப்பிற்கு ஒதுக்கும் பணத்தை கொஞ்சம் அதிகம் ஒதுக்கு எப்படியாவது கடனை முதலில் அடைத்து விடுங்கள்.

நிதி ஆலோசகர் வித்யா பாலா, இணை நிறுவனர் primeinvestor.in

எப்போதுமே எந்தவொரு தேவையும் உடனடியாக வேண்டும் என்பதுப்போல தான் இருக்கும். ஆனால் அது இப்போதே தேவையா? தள்ளிப்போட முடியுமா? என்று யோசித்து Delayed Gratification டெக்னிக்கை கடைப்பிடிப்பது அவசியம்.

ஒரு விஷயத்தை வாங்க பிளான் செய்வதற்கு முன்பு, நமது சேமிப்பை வைத்து அந்த பொருளை வாங்க முடியுமா? என்று யோசியுங்கள். வாங்க முடியும் என்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று ஆசை அல்லது தேவையில் கால் வைத்துவிடாதீர்கள்.

வித்யா பாலா

ஒரு ஆண்டு பிளானுக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது நல்ல சாய்ஸ் அல்ல. “அதிக நாட்கள், அதிக காசு” என்பது தான் அவைகளின் கான்செப்ட். அதனால் வங்கி மற்றும் தபால் நிலையத்தின் ரெக்கரிங் டெபாசிட்டை ஒரு ஆண்டு தேவைகளுக்கு தேர்ந்தெடுக்கலாம். சீட்டு போன்றவைகளில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் ஆகும்.

ஒருவேளை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைத்தால் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒரு ஆண்டு இலக்கிற்கு நல்லது. எந்தவொரு இலக்காக இருந்தாலும் ஒரு ஆண்டுக்கு அந்த தொகையை சரியாக நம்மால் சேமிக்க முடியுமா என்பதை யோசித்து பார்ப்பது அவசியம்.

திருமணம் போன்ற பிளான்களை ஒரு ஆண்டு இலக்காக வைத்திருந்தால், நிச்சயம் அதை தவிர்த்துவிடுங்கள். மேலும் கடன் வாங்கி திருமணம் செய்வது தவறான பிளான் ஆகும். அதனால் முடிந்தளவு ஒரு ஆண்டுக்கு திருமணத்தை தள்ளி போட்டு விடுங்கள் அல்லது சிம்பிளாக திருமணம் முடிப்பது நல்லது.

2024-ம் ஆண்டில் உங்க நிதி இலக்கு என்ன? கமெண்ட் பண்ணுங்க மக்களே…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.