சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 97-வது இசைவிழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, அசலான இசையையும் அசலான கலைஞர்களையும் எப்போதும் மியூசிக் அகாடமி கவுரவிக்கும் என்று புகழாரம் சூட்டினார்.
சென்னை மியூசிக் அகாடமியின் 97-வது இசைவிழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சி (சதஸ்) நேற்று டிடிகே கிருஷ்ணமாச்சாரி அரங்கில் நடைபெற்றது. இதில், சங்கீத கலாநிதி விருதை பாம்பே ஜெயக்கும், சங்கீத கலா ஆச்சார்யா விருதை பல்குளங்கரா கே.அம்பிகாதேவி, மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸுக்கும், டி.டி.கே.விருதை தவில் வித்வான் திருநாகேஸ்வரம் டி.ஆர்.சுப்ரமணியன், வித்வான் பி. சற்குருநாதன் ஓதுவாருக்கும், இசை அறிஞர் விருதை வித்வான் அரிமளம் டாக்டர் எஸ்.பத்மநாபனுக்கும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வழங்கி கவுரவித்தார்.
கலைஞர்களையும் மியூசிக் அகாடமியின் செயல்பாடுகளையும் வாழ்த்தி அவர் பேசியதாவது: மியூசிக் அகாடமி இத்தனை ஆண்டுகள் இசைக் கலைஞர்களுக்கு தொடர்ந்து விருதுகளை அளித்து கவுரவித்து வருவது எளிதான காரியம் அல்ல. இத்தகைய அரிய செயலுக்குக் காரணம், காலத்துக்கேற்ற சிந்தனைகளோடு இருக்கும் மியூசிக் அகாடமியின் தலைவர் நரசிம்மன் முரளி. அவரிடம் இயல்பிலேயே இருக்கும் இரண்டு நல்ல விஷயங்கள் பொறுமை, விவேகம்.
கச்சேரியே ஐஏஎஸ் தேர்வுதான்: தங்க சங்கிலியில் கோத்த மணிகளைப்போல் அமர்ந்திருக்கும் கலைஞர்கள், அதிலும் அதில் பதக்கமாய் ஜொலிக்கும் சங்கீத கலாநிதி பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் கலா ஆச்சார்யா, டி.டி.கே. இசை அறிஞர் விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.
செம்மங்குடி சீனிவாசய்யர் ஒருமுறை என்னிடம், “நீ ஒருமுறை பரீட்சை எழுதிவிட்டு ஐஏஎஸ் ஆகிவிட்டாய். ஆனால் எனக்கு ஒவ்வொரு கச்சேரியும் ஐஏஎஸ் தேர்வுபோல்தான்” என்றார். அசலான இசையையும் அசலான கலையையும் கலைஞர்களையும் கவுரவிப்பதுதான் மியூசிக் அகாடமி. மியூசிக் அகாடமி என்றாலே அசல்தான்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, “அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி மற்றும் ராஜகோபாலாச்சாரியாரின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால்கிருஷ்ண காந்தி இந்த விழாவில் பங்கெடுக்க இசைந்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்” என்றார்.
குருமார்களுக்கு நன்றி: ஏற்புரை ஆற்றிய சங்கீத கலாநிதி விருது பெற்ற பாம்பே ஜெய, அவரின் பெற்றோருக்கும்,குருமார்களான டி.ஆர்.பாலாமணி, வயலின் மேதை லால்குடி ஜெயராமனுக்கும் மியூசிக் அகாடமிக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
கலா ஆச்சார்யா, டி.டி.கே. விருது பெற்றவர்களின் சார்பாக இசை அறிஞர் விருது பெற்ற அரிமளம் டாக்டர் எஸ்.பத்மநாபன் ஆற்றிய ஏற்புரையில், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளில் இருந்து பெருமை என்னும் அதிகாரத்தில் ஒரு குறள் எனக்கு நினைவுக்கு வருகிறது. பெருமை உடையவர்கள் சேவையை ஆற்றியிருக்கின்றனர். அருமையானவர்கள் விருது பெற்றிருக்கின்றனர். இத்தகைய அருமையானவர்களை தேர்ந்தெடுத்த பெருமையானவர்கள் மியூசிக் அகாடமியின் தலைவர் மற்றும் அதன் பிரதிநிதிகள்” என்றார். நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியின் செயலாளர் வி.ஸ்ரீராம் தொகுத்தளித்தார்.