திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற ‘ஆருத்ரா’ தரிசனத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் இன்ஸ்பெக்டர் காந்திமதியை, தி.மு.க பிரமுகரான இரா.ஸ்ரீதரன் உட்பட 3 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் காந்திமதி புகாரளித்தார். புகாரின்பேரில், தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவருமான ஸ்ரீதரன் என்கிற திருமகன், அவரின் துணைவியார் சிவசங்கரி, இவர்களின் செயலுக்கு உடந்தையாக இருந்த கோயில் ஊழியர் கே.ஆர்.ரமேஷ் ஆகிய 3 பேர்மீதும் வழக்கு மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் தாக்குதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் சட்டம் பிரிவு-4 ஆகிய பிரிவுகளின்கீழ் இவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டிருக்கிறது. எஃப்.ஐ.ஆரில், தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரன் ‘முதல்’ குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரின் துணைவியார் இரண்டாவது குற்றவாளியாகவும், கோயில் ஊழியர் ரமேஷ் மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
தாக்கப்பட்ட காந்திமதி, இன்ஸ்பெக்டராகப் பணியுயர்வுப் பெற்றே 6 மாதங்கள்தான் ஆகின்றன.
வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவந்த காந்திமதி, தேசூர் காவல் நிலையத்தையும் கூடுதலாகக் கவனித்துவந்தார். இந்தச் சம்பவத்தால், விடுமுறையில் மன உளைச்சலுக்கு ஆளாகி, விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்ட இன்ஸ்பெக்டர் காந்திமதி, நேற்றைய தினம் வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும், இப்போது வரை அவரை தாக்கிய நபர்கள் கைதுசெய்யப்படவில்லை.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ளதாகச் சொல்லப்படும் தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரே, ‘‘இன்ஸ்பெக்டரைக் கூட்டத்தில் முகம் தெரியாத வேறு யாரோ தாக்கிவிட்டார்கள்” என்று வாதத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், இடை மனுதாரராக ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் என்பவர் குறுக்கிட்டு, ‘‘பாதிக்கப்பட்ட பெண் ஆய்வாளர் தனது புகாரில் ‘கண்ணீர் மல்க வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டு, தன்னை யார் தாக்கினார்கள் எனவும் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காவல்துறை எந்த அளவுக்கு ஒரு காவல் ஆய்வாளரின் புகாரைக் கையாளுகிறது’’ என்பதை எடுத்துச் சொன்னார். இதையடுத்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த விசாரணை அதிகாரியான திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் சுபாவை அழைத்து, ‘என்ன நடந்தது’ என நீதிபதி கேள்வியெழுப்பினார். ‘மனுதாரர் தாக்கியது உண்மைதான்’ என்றார் விசாரணை அதிகாரி சுபா. இதையடுத்து, “ஃபர்ஸ்ட் ஜெயிலுக்குப் போங்க. அப்புறம் பெயில் கேட்டு வாங்க…” என்று சொல்லி, தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரனின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி!