மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 19.6.2020-ல் கரோனா காலத்தில் ஊரடங்கு நிபந்தனையை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தs சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது 2427 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி தமிழரசி முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்த கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது நீதித்துறை நடுவரிடம், ‘தந்தை, மகன் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழக்கவில்லை. இருவரையும் கோவில்பட்டி கிளை சிறையில் சிறை காவலர்கள் தாக்கியுள்ளனர். அதனால் தான் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதை நீதித்துறை நடுவர் பாரதிதாசன் மறைக்கிறார்’ என வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை நீதித்துறை நடுவர் பாரதிதாசன் மறுத்தார். மேலும் அவர், ‘தந்தை, மகன் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி கிளை சிறையில் இருவரும் தாக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.