செல்பி எடுக்க நடிகர்களைத் துரத்தும் ரசிகர்கள்
மொபைல் போன்கள், அதுவும் கேமரா வைத்த போன்கள் வந்த பிறகு பலரும் போட்டோக்களை எடுக்கப் பழகி அதுவே ஒரு வியாதி போல வந்துவிட்டது. செல்பி எடுக்கும் கேமரா போன்கள் வந்த பிறகு எங்கு பார்த்தாலும் செல்பி, எதிலும் செல்பி என விதவிதமாக போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட ஆரம்பித்தார்கள்.
சினிமா நடிகர்கள், நடிகைகளைப் பார்த்தால் உடனே செல்பி எடுக்க வேண்டும் என பலரும் அவர்களை நெருங்கிச் செல்லவும், துரத்தவும் ஆரம்பித்தார்கள். சிலர் மட்டுமே அதை விரும்பி ஏற்றுக் கொண்டு புகைப்படங்களை எடுக்கிறார்கள். சிலர் அவர்கள் வேலைகளைப் பார்க்கும் அவசரத்தில் அப்படி எடுக்க மறுத்து சென்றுவிடுகிறார்கள். இதனால், போன்களைப் புடுங்கி எறிந்த சம்பவங்களும் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபமாக சில முன்னணி நடிகர்களுடன் செல்பி எடுக்க முயன்றவர்களின் வீடியோக்களும் பரவி அவர்களை அச்சப்படவும் வைத்துள்ளது. நடிகர்களுக்கான 'பிரைவசி' என்பது இப்போது இல்லாமல் போய்விட்டது. அவர்கள் எங்கு சென்றாலும் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வியூஸ்களையும், லைக்குகளையும் அள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நல உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். அப்போது ஒரு ரசிகை விஜய்யுடன் செல்பி மட்டும் எடுத்துக் கொண்டு, உதவிப் பொருட்கள் தேவையில்லை என்று சென்றது விஜய்யை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்து சூர்யா, ஜோதிகா வெளிநாட்டிலிருந்து மும்பை திரும்பிய போது விமான நிலையத்தில் அவர்களுடன் செல்பி எடுப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவர் கூடவே ஓடி வந்தார். தன்னை வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரிடமிருந்து போனை வாங்கி அந்த வீடியோவை அஜித் டெலிட் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களில் முன்னணி நடிகர்களுக்கு நடந்துள்ள இந்த 'படமாக்கல்' சம்பவங்கள் ரசிகர்களுக்குப் பாடமாக அமையுமா, அல்லது, நடிகர்களுக்குப் பாடமாக அமையுமா ?.