சிவகங்கை: மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக தலைமை உள்ளூர் பிரச்சினைக்கு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சிவகங்கை நகராட்சியில் தூய்மைப் பிரச்சினைக்கு ஜன.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான அதிமுக முக்கிய பிரச்சினைகளுக்கு மட்டும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வந்தது. ஆனால் பாஜகவோ உள்ளூர் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதனால், பெரிய அளவில் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என அதிமுக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், உள்ளூர் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மக்களிடம் அதிமுக நெருக்கம் காட்ட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ‘சிவகங்கை நகராட்சியில் தினமும் 13.06 டன் குப்பை சேகரமாகிறது. ஆனால், குப்பை கிடங்குக்கு இடம் இல்லாததால், ஆங்காங்கே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதேபோல் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் கட்டணத்தை சமீபத்தில் 100 சதவீதம் உயர்த்தினர்.
மேலும் பாதாளச் சாக்கடை வைப்பு தொகை பெறப்பட்ட பல வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளன. தற்போது இப்பிரச்சினைகளை அதிமுக தலைமை கையில் எடுத்துள்ளது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், புதிய குப்பை கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கையில் ஜன.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெறுகிறது.