புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா தீதிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட, ஆரோக்கியமான வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து 1998-ல் திரிணமூல் காங்கிரஸ் எனும் தனிக்கட்சி தொடங்கிய மம்தா பானர்ஜி, கடந்த 2011 முதல் அம்மாநில முதல்வராக இருந்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா அணியில் உள்ள அவர், மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜகவும், திரிணமூல் காங்கிரசை கடுமையாக எதிர்த்து வருகிறது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களாலும், ரோஹிங்கியாக்களாலும் தாக்கப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜியின் தலைமையிலான மேற்கு வங்க அரசு காட்டாட்சி நடத்தி வருகிறது” என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.