புதுடெல்லி: ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நான் ஒருபோதும் செல்லப்போவதில்லை என்றும், சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதியின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்றும் பூரி சங்கராச்சாரியார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல முக்கியத் தலைவர்கள், ஆன்மிகப் பெரியோர், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், நாட்டின் முக்கிய இந்து மதத் தலைவர்களில் ஒருவரும், ஒடிசாவில் அமைந்துள்ள பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் நகரில் புதன்கிழமை நடைபெற்ற சனாதன தர்ம சபையின் சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவிருக்கும் விழாவுக்கு நான் செல்லப்போவதில்லை.
எங்கள் மடத்துக்கு அயோத்தியிலிருந்து அழைப்பிதழ் வந்துள்ளது. நான் அங்கு வருவதாக இருந்தால், ஒரு நபருடன் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு நபருடன் வந்தாலும் அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொன்னாலும் கூட, அந்நாளில் நான் அங்குச் செல்ல மாட்டேன். இதற்காக நான் சற்றும் கவலைப்படவில்லை. ஆனால், மற்ற சனாதன இந்துக்களைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
குறிப்பாக, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தன்னை மதச்சார்பற்றவராக சித்தரிப்பதில் விருப்பம் இல்லாதவர். அவர் தைரியமானவர், இந்துத்துவவாதி. அத்துடன், சிலை வழிபாட்டின் கருத்தாக்கத்தில் பெருமை கொள்கிறார். அவர் தன்னை மதச்சார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கோழை அல்ல. ஆனால், சங்கராச்சாரியார் என்ற முறையில் நான் அங்கு என்ன செய்வேன்? பிரதமர் மோடி சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது, நான் அவரை கைதட்டி வாழ்த்த வேண்டுமா?” என்று அவர் கூறியுள்ளார்.