மதுரை: தமிழகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு உடனடியாக ரூ.2,028.31 கோடி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, தமிழகத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடி நிதி வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளர் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் 2 நாட்களாக கன மழை பெய்தது. இந்த மழையால் சென்னையில் பெரு்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியது. 1 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளானது.
மாநில அரசின் தீவிர முன் தடுப்பு நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் குறைக்கப்பட்டன. புயல் சேதத்தை பார்வையிட வந்த மத்தியக்குழுவிடம் வாழ்வாதார உதவி மற்றும் தற்காலிக மறுசீரமைப்புக்காக ரூ.7,033 கோடியும், நிரந்தர மறுசீரமைப்பிற்காக ரூ.12,659 கோடியும் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 17.12.2023 மற்றும் 18.12.2023 அன்று வரலாறு காணாத மிகக் கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 90 சதவீதத்துக்கும் அதிக மழை பெய்தது.
இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை உதவியுடன் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தென்மாவட்டங்களில் மழை சேதங்களை சரிசெய்ய உடனடி நிவாரணம் மற்றும் தற்காலிக மறுசீரமைப்பு மற்றும் நிரந்தர சீரமைப்புக்கு ரூ.9,602.38 கோடி என மொத்தம் ரூ.18,214.52 கோடி கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1200 கோடி விடுவிக்கப்பட்டது. தற்போது மாநில பேரிடர் நிவாரண நிதியில் 31.12.2023 நிலவரப்படி ரூ.427.97 கோடி தர வேண்டியதுள்ளது. இப்பணத்துடன் இரட்டை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார உதவிக்காக ரூ.2,028.31 கோடியை தமிழக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.