உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை இழக்கிறது 'புர்ஜ் கலிபா'

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2010ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தது. இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி 6 அங்குலம்)

உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருகின்றனர். அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் செல்லும் இடங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் உள்ளது.

இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிபா, இன்னும் சில ஆண்டுகளில் தனது சாதனையை இழக்கப்போகிறது.

அதாவது, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடம் முழுமையடைந்தவுடன், அது புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமானதாக இருக்கும். அந்த கட்டிடத்தின் பெயர் கிங்டம் டவர். ஜெட்டா டவர் என்றும் அழைக்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல்1ஆம் தேதி கட்டுமான பணி தொடங்கியது. இதன் உயரம் 1,000 மீட்டருக்கும் மேல் இருக்கும் (1 கிமீ) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொகுசு வீடுகள், அலுவலகம், சொகுசு குடியிருப்புகள் ஆகியவற்றின் கலவையாக இந்த கட்டிடம் இருக்கும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.