லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில சிறைத்துறை மந்திரி தரம்வீர் பிரஜாபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“உத்தர பிரதேசத்தில் உள்ள சிறைகளில் தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அனைத்து கைதிகளும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல. சில சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.