குடும்பத்திற்கே நல்ல நேரம்… கிரிக்கெட்டில் கலக்கும் 'கான்' சகோதரர்கள்…!

Sarafaraz Khan Musheer Khan: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹைதாபாத்தில் நடைபெற்று வரும் சூழலில், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா என அடுத்தடுத்த போட்டிகள் பல நகரங்களில் நடைபெறுகிறது. மேலும், இந்தியாவில் தற்போது ரஞ்சி கோப்பை தொடர் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா நாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரும் நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து வரும் போட்டிகள்

எனவே, மார்ச் மாதம் ஐபிஎல் தொடங்கும் முன் இந்திய அணியின் சீனியர் மற்றும் ஜூனியர் அணிகளுக்கு தொடர்ந்து போட்டிகள் இருக்கின்றன. மகளிர் ஐபிஎல் தொடரும் விரைவில் தொடங்க உள்ளது. எனவே, அடுத்தடுத்து பல வீரர்கள் வெளிச்சத்திற்கு வருவதையும் நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக, முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அண்ணன் சர்ஃபராஸ் கான்

கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி கோப்பைகளில் ரன்களை மலை போல குவித்த போதிலும், அவரின் பிட்னஸை காரணம்காட்டி அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. அவர் உச்சக்கட்ட பார்மில் இருந்த சமயத்தில் அவருக்கு உள்ளூர் வாய்ப்பளித்து அவரை சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆயத்தப்படுத்தாமல், தொடர்ந்து சொதப்பிய சீனியர்களுக்கே பிசிசிஐ அப்போது வாய்ப்பளித்து வந்தது. இருப்பினும், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை அவர் சரியாக பயன்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎல் ராகுல், விராட் கோலி மிடில் ஆர்டர் பேட்டர்கள் இல்லாததால் நம்பர் 4 இடத்தில் நிச்சயம் சர்ஃபராஸ் கான்தான் இடம்பெறுவார் என்பது வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடினார் சர்ஃபராஸ் கான். இருப்பினும், பிளேயிங் லெவனில் ரஜத் பட்டிதார் என்ற வீரரும் கடும் போட்டியை அளிக்க வாய்ப்புள்ளது. 

தம்பி முஷீர் கான்

சர்ஃபராஸ் கான் ஒருபுறம் இருக்க அவரின் இளைய சகோதர் முஷீர் கானும் தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்து சாதனைகளை தகர்த்து வருகிறார். இந்திய அணி தற்போது சூப்பர் சிக்ஸ் தொடரில் நியூசிலாந்து அணியை இன்று சந்திக்கிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 295 ரன்களை அடித்துள்ளது. பந்துவீச்சிலும் கலக்கி வருகிறது. 

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முஷீர் கான் 126 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 131 ரன்களை குவித்தார். இது இந்த தொடரின் இவருக்கு இரண்டாவது சதமாகும். மேலும், நடப்பு தொடரில் 300 ரன்களுக்கு மேல் குவித்து, முதல் வீரராக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் முஷீர் கான் ஆவார். 2004ஆம் ஆண்டில் மூன்று சதங்கள் அடித்த ஷிகர் தவான் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.

சர்ஃபராஸ் கான் நீண்ட நெடிய போராட்டத்திற்கு நேற்று இந்திய அணியில் நுழைந்த அதே தருணத்தில், இன்று அவரது இளைய சகோதரர் இன்று பெரிய மைல்கல்லை எட்டியிருப்பது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டிற்கே பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.