நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக வரம்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
புதிய விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுச் சட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோரின் வாழ்க்கைப் பாதுகாப்பிற்குத் தேவையான புதிய விதிமுறைகளுடன் தனிப்பட்ட விவரங்கள் இல்லாமல் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பான அனைத்து நிபுணர்களுடனும் பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடனும் நேற்று (29) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கட்டுநாயக்க – கொழும்பு நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவதும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட குறைவாக வாகனம் செலுத்துவதும்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட அமைச்சர், தனிப்பட்ட முறையில் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்டளதாகவும், இதற்காக ஒரு நிபுணர் குழுவின் மூலம் வழங்கப்படும் பரிந்துரைக்கமைய இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், நெடுஞ்சாலைகளில் விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களைக் காப்பாற்றும் வகையில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆட்களை ஈடுபடுத்தும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதுடன், நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டராக இருந்தாலும், குறைந்தபட்ச வேக வரம்பு இல்லாததால், குறைந்தபட்ச வேக வரம்பையும் உள்ளடக்கி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் இங்கு மேலும் சுட்டிக்காட்டனார்.