திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில், சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதில் ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல சிறப்பு வழியை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்களும் முந்தியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.

கோயில் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள், முந்தியடித்துக் கொண்டு வந்த எடப்பாடியைச் சேர்ந்த சந்திரன் என்பவரைப் பிடித்து இழுத்தனர். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சந்திரன் மற்றும் அவரின் மகன் ஆகியோர் பழனி மலைக்கோயிலிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையறிந்த நூற்றுக்கணக்கான எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள், கோயில் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, போராட்டத்தில் இறங்கினர். பழனி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் கோயில் ஊழியர்களைக் கைதுசெய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும் `எங்களை தாக்கிய பாதுகாவலர்கள் வரும் வரை, நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்’ என்றதால், கோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கோயில் உதவி ஆணையர் லட்சுமி, எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பக்தரைத் தாக்கியதாக கூறப்படும் கோயில் அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட செய்வதாகவும், தற்காலிகப் பணியிலுள்ள 3 பாதுகாவலர்களைப் பணிநீக்கம் செய்வதாகவும் உறுதியளித்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கலைந்து சென்றனர். ஆனால் சிலர் மட்டும் `பாதுகாவலர்கள் வரும் வரை நாங்கள் செல்ல மாட்டோம்’ என்றனர். சிறிது நேரத்தில் அவர்களும் கலைந்து சென்றனர். இதனால் மலைக்கோயிலில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பரபரப்பு நீடித்தது.